காமன்வெல்த் மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிற்கு மகளிருக்கான 62 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி மாலிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் அவர் பதக்கத்தை உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாவது பதக்கதை உறுதி செய்தார்.
இந்நிலையில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் அன்ஷூ மாலிக் அரையிறுதியில் விளையாடினார். இவர் அரையிறுதியில் இலங்கையின் நெத்மியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தியாவிற்கு 3வது பதக்கத்தையும் உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து ஆடவருக்கான 86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதிப் போட்டியில் கனடா வீரர் அலெக்சாண்டர் மூரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக புள்ளிகள் எடுப்பதில் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா 3-1 என்ற கணக்கில் இந்தப் போட்டியை வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு நான்காவது பதக்கதையும் உறுதி செய்துள்ளார்.
முன்னதாக ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இவர் அரையிறுதிப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாயை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் 12-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் மோஹித் வெண்கலப் பதக்க போட்டியில் சண்டை செய்ய உள்ளார். அதேபோல் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்கரன் காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இவர் ரெபிசார்ஜ் ரவுண்டில் வெற்றி பெற்று தற்போது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்