44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீபம்(Chess Olympiad 2022 Torch Relay) இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தது. இதில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

  


மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணி சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள். இதற்காக அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டதோடு பணிகள் நிறைவுற்று போட்டித் தொடருக்கான ஒத்திகை சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.






இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 28 ஆம் தேதி சென்னை வரவுள்ளார். தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அன்றைய ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தப் போட்டி குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  கடந்த 19 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும்- பல மாநிலங்களுக்கு பயணித்து இன்று கன்னியாகுமரி வந்தடைந்தது. அங்கு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக  அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ,விளையாட்டு வீரர்கள் , அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண