Chess Olympiad 2022: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது உக்ரைன் பெண்கள் அணி. போருக்கு மத்தியிலும் வெற்றி உக்ரைனின் உறுதித் தன்மையினை நிரூபித்துள்ளது.


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29ம் தேதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை நடை பெற உள்ளது. 12 நாட்கள் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கடைசி தினம் இன்று. இன்றைய கடைசி தின நிகழ்ச்சியில்  மாலை, நேரு ஸ்டேடியத்தில் வெற்றி பெற்ற தனி நபர் மற்றும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. 


ரஷ்யா சீனாவுக்கு இடமில்லை


இந்தியாவில் முதல் முறையாக அதுவும், சென்னையில் நடைபெற்ற இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் மிகவும் உலக அளவில் கவனம் பெற்ற வெற்றியாக பதிவானாலும், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக உலகமே பார்க்கும் வெற்றி, உக்ரைன் பெண்கள் அணி பெற்ற வெற்றி தான். இந்த செஸ் ஒலிம்பியாட்டில், தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இல்லாத அளவிற்கு 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். சுருக்கமாக சொன்னால் உலகின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், 162 அணிகள் பெண்கள் பிரிவிலும் கலந்து கொண்டன. இதுவரை நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகளின் எண்ணிக்கையினைவிட இந்த முறை கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். அதாவது, இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அதிக பட்சமாக 180 நாடுகள் போட்டியில் பங்கெடுத்தன. இதுவரை இல்லாத அளவில் 187 நாடுகள் இம்முறை களமிறங்கினாலும், செஸ் ஒலிம்பியாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் ரஷ்யா மற்றும் சீனா இம்முறை கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யாவும், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சீனாவுக்கும் அனுமது மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


தோல்வியை சந்திக்காத உக்ரைன் பெண்கள் அணி


ஒலிம்பியாட்டைப் பொருத்தவரை, 11 லீக் போட்டிகள் சுவிஸ் லீக் வடிவத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு அணியும் மிகவும் கடினமான ஒவ்வொரு சுற்றுகளைக் கடந்து  அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறின. இதில் பெண்கள் பிரிவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அணி, 11 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் சமனும் செய்துள்ளன. ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத உக்ரைன் பெண்கள் அணி, பதக்கத்திற்கான இறுதி லீக் போட்டியில், போலாந்து பெண்கள் அணியினை சந்தித்தது. போட்டி தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி, நான்கு போட்டிகளில், 3-1 என்ற கணக்கில் வென்று உக்ரைன் பெண்கள் அணி, உலக செஸ் சாம்பியன் பட்டத்தினை வென்றது. 


போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்


உக்ரைன் பெண்கள் அணி வென்றிருக்கும் இந்த உலக சம்பியன் பதக்கமானது, உக்ரைன் நாடு ரஷ்யாவுடனான போரில் கடும் பாதிப்பினை எதிர் கொண்டு வரும் காலகட்டத்தில் ”போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்” என்பதற்கு இணங்க,  வெல்லப்பட்டது என்பதால், உலக அளவில் உக்ரைன் பெண்கள் அணியினை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில், இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் தோல்வியைச் சந்திக்காத ஒரே பெண்கள் அணி என்ற பெருமையினையும் உக்ரைன் பெண்கள் அணி பெற்றுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.