திருவாரூர் மாவட்டம் காட்டூர் சித்தமல்லி அம்மையப்பன் கொல்லுமாங்குடி செல்லூர் வடபாதிமங்கலம் மாங்குடி களப்பால் உள்ளிக்கோட்டை அக்கரைக்கோட்டகம் போன்ற இடங்களில் 500க்கும் மேற்பட்ட மலைக் குறவன் இனத்தைச் சார்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும் இதனால் தங்கள் படிப்பை தொடர முடிவதில்லை எனவும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். தங்களுக்கு இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால் கல்வி உதவித்தொகை பெறுவதிலும் கல்லூரி படிப்பை தொடர்வதிலும் பெரும் சிக்கல் இருப்பதாகவும் இதனால் தங்கள் கல்வி கனவு கலைந்து போவதுடன் பெற்றோர்கள் தங்களை பன்னி மேய்க்க சொல்வதாகவும் மாணவ மாணவிகள் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.




இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், தங்களுக்கு விசாரணை முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும் கடந்த 13 வருடங்களாக ஜாதி சான்றிதழ் கேட்டு தாங்கள் போராடி வருவதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் எஸ்சி, எம்பிசி பட்டியலில் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதாக கூறுவதாகவும் தாங்கள் பழங்குடியின மலைக் குறவன் சாதி என்பதால் தங்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தங்கள் உறவினர்கள் கடலூர் மாவட்டத்தில் வசிப்பதாகவும் அவர்களுக்கு சாதி சான்றிதழ் அங்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 




இதனையடுத்து  திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் வந்து மனுவினை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனையடுத்து மாவட்ட ஆட்சியரை அவர்கள் சந்தித்தனர். அவரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தயைடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மலைகுறவர் இனத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதன் காரணமாக பல்வேறு சலுகைகளை பெற முடியாத சூழ்நிலைக்கு அவர்களை தள்ளி உள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகள் கல்வி கற்பதிலும் பட்டப்படிப்பு போன்ற உயர் கல்விக்கு செல்வதிலும் கல்வி உதவித்தொகை பெறுவதிலும் தொடர்ந்து சிக்கல் என்பது நீடித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகள் உயர் கல்வி அடைவதற்கு சலுகைகளை பெறுவதற்கும் உதவுகின்ற வகையில் பழங்குடியினப் பட்டியலில் சேர்த்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண