மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் 6 அணிகள் களமிறங்கிய நிலையில், இந்திய பி அணி மீது தான் அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்திய பி அணியில் இடம்பிடித்துள்ள குகேஷ் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய பி அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரக்ஞானந்தா கடுமையான போராட்டத்திற்கு பிறகு, 85வது நகர்த்தலில் சாண்டோசிடம் வீழ்ந்தார்.
ஆனால், மற்றொரு தமிழக வீரரான குகேஷ் முன்னாள் உலக சாம்பியன் ஷிரோவை சந்தித்தார். ஷிரோவிற்கும், குகேஷிற்கும் இடையேயான போட்டி தொடக்கம் முதல் கடும் சவால் நிறைந்ததாகவே இருந்தது. குறிப்பாக, குகேஷ் ஸ்பெயின் வீரருக்கு கடும் சவால் அளித்தார். குகேஷின் சாமர்த்தியமான காய் நகர்த்தலினால் முன்னாள் உலக சாம்பியன் ஷிரோவ் வீழ்ந்தார். குகேஷின் தொடர்ச்சியான 5வது வெற்றி மூலம் இந்தியாவும் 2.5 -1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
இந்த வெற்றிக்கு பிறகு பேட்டி அளித்த குகேஷ் கூறியதாவது, "அவர் தவறு செய்த பிறகு நான் நல்ல நிலைக்கு சென்றேன். அவர் மெல்ல ஆட்டத்தை விட்டும் வெளியேற்றினேன். அவருடன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஷிரோவ் கேலிபரை வீழ்த்தியது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரைத் தூண்டிவிடுவதே எனது உத்தியாக இருந்தது. நான் எதிர்பார்த்த ஆக்ரோஷமான நகர்வுகள் அவரிடம் இருந்து வரவில்லை.” என்றார்.
2006ம் ஆண்டு சென்னையில் பிறந்த குகேஷ் 9 வயதுக்குட்பட்ட ஆசியன் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். ஆசியன் யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப்பதக்கத்தை வென்றார். அதில், 12 வயதுக்குட்பட்டோர் மற்றும் ரேபிட் சுற்றுகளும் அடங்கும்.
மிக குறைந்த வயதிலே கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை தன்னுடைய 12 வயது 7 மாதம் 17 நாட்களில் படைத்தார். ஜூலியஸ் பியர் சேலஞ்சர்ஸ் செஸ் டூர் பட்டம் வென்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் பிரபல கிராண்ட்மாஸ்டர் லீ குவாங் லியாமை மூன்றாவது சுற்றிலே வென்று அனைவரையும் திகைப்படைய வைத்தார்.
கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலகளவில் செஸ் தரவரிசையில் 38வது இடத்திலும், இந்திய அளவில் 4வது இடத்திலும் உள்ளார். சர்வதேச அளவில் பிரக்ஞானந்தா 90வது இடத்தில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செஸ் ஜாம்பவான்களை அச்சுறுத்தும் இந்திய பி அணியில் பிரக்ஞானந்தா, அதிபன், குகேஷ் மற்றும் நிகால் சரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்