Naga Panchami 2022: நாக பஞ்சமி அன்று செய்யக்கூடியது, செய்ய கூடாதது என்ன? வளம் தரும் நாக வழிபாட்டு நம்பிக்கைகள்..
இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகையாக கருதப்படுவது நாக பஞ்சமி. ஆடி மாதம் வளர்பிறை திதியில் நாக தேவதையை வழிபடுவது நாக சதுர்த்தி விரதம். அந்த நாளில் நாக தேவதைக்கு பூஜைகள் செய்ய வேண்டும், புற்றுக்கு பால் ஊற்ற வேண்டும். நாகர்களுக்கு சாப நிவர்த்தி கிடைத்த நாளை தான் நாக பஞ்சமி தினமாக வழிபடப்படுகிறது. நாக பஞ்சமி தினத்தில் விரதம் இருப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்கும், கணவர், சகோதரர் மற்றும் குழந்தைகளின் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.
நாக தேவதை வழிபாடு:
நாக தேவதையை இந்நாளில் வழிபடுவதன் முலம் சர்ப்ப தோஷம் மற்றும் பாம்புக்கடி பயத்தில் இருந்து வெளிவர முடியும் என நம்பப்படுகிறது. மக்கள் இந்த நல்ல நாளில் விரதத்தை கடைபிடித்து ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை என தங்களால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள். பெண்கள் குடும்ப நலனுக்காக நாக தேவதைக்கு பூஜைகள் செய்கிறார்கள். இந்து மத சாஸ்திரத்தின் படி இந்த நாளில் நாகங்களை வணங்குவதன் முலம் வேண்டிய பலன்கள், செழிப்பு, சக்தி மற்றும் அளவுக்கு அதிகமான செல்வம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
நாக வழிபாட்டிற்காக சில பக்தர்கள் களிமண்ணால் நாக சிலைகளை உருவாக்கி அதற்கு பூக்கள், பழங்கள், இனிப்புகள், பால் வைத்து பூஜை செய்கிறார்கள். ஆனால் நாக வழிபாடு செய்வதற்கு முன்னர் எது செய்ய வேண்டும் எது செய்ய கூடாது எனவும் சில நம்பிக்கைகள் நிலவுகிறது
சர்ப்பங்களை வழிபடலாம்:
உயிருள்ள நாகங்களை வணங்குதல் கூடாது. ஆனால் நாக சர்பங்களை வணங்குவதன் முலம் அபரிமிதமான செல்வங்களைப் பெறலாம். உயிருள்ள நாகங்கள் ஒரு மாமிச விலங்கு என்பதால் அவற்றிற்கு பால் உணவளிக்க கூடாது. கட்டாயமாக உணவளித்தால் அது அவற்றின் உயிருக்கு ஆபத்தாய் முடியும் என்பது அனுபவங்களால் சொல்லப்படுகிறது
கூர்மையான ஆயுதங்கள் கூடாது:
இந்து பஞ்சாங்க அடிப்படியில் படி நாக பஞ்சமி அன்று கத்தரிக்கோல், கத்தி, அரிவாள், ஊசி போன்ற கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூர்மையான பொருட்களை அந்த நாளில் பயன்படுத்தினால் சாதகமற்ற முடிவுகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.
பூமியை தோண்டக்கூடாது:
சிலர் நாகங்கள் பூமிக்கு அடியில் வாழ்வதாக நம்புகிறார்கள். அதனால் பூமியை தோண்டுகிறார்கள். இது தடை செய்யப்பட்ட ஒரு காரியம். நிலத்தை தோண்டுவதால் நாகங்களின் வாழ்விடங்கள் சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளன. நாக பஞ்சமியின் கதையின் படி விவசாயி ஒருவர் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தன்னை அறியாமல் கலப்பையால் தோண்டும் போது நாக குட்டிகளை கொன்றுவிட்டார். அதற்காக அந்த குட்டிகளின் தாய் நாகம் விவசாயியின் முழு குடும்பத்தையும் கொன்றுவிட்டது என நம்பப்பட்டது. அதனால் நாகபஞ்சமி அன்று நிலத்தை தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது
நேற்றைய தினம் நாக பஞ்சமி நாளாக, நம்பிக்கை கொண்டவர்களால் அனுசரிக்கப்பட்டது.