செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க நாள் முதலே இந்தியர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஒட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 8 வயது இரட்டையர் சிறுமிகள் விஸ்வநாதன் ஆனந்தை திணறவைத்துள்ளனர். விளையாட்டிலா என்று கேட்காதீர்கள். விளையாட்டு தொடர்பான கேள்வியில்தான் அவர்கள் விஸ்வநாதன் ஆனந்தை திணறவைத்துள்ளனர். இத்தனைக்கும் கேள்வி செஸ் விளையாட்டு தொடர்பானதுதான்.
அப்படி என்னதான் கேட்டனர் அந்தச் சிறுமிகள்:
செஸ் விளையாட்டில் எப்படி காய்களை திசை திருப்புவது என்று கேட்டனர். முதலில் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்ட ஆனந்த் வேறு ஒரு பதிலைச் சொன்னார். பின்னர் அந்தச் சிறுமிகள் குறுக்கிட்டு தங்கள் கேள்வியை தெளிவாக உரக்கக் கேட்டனர். அதற்கு சிரித்துக்கொண்டே, ஐ ஆம் சாரி. காய்களை எப்படி திசைதிருப்புவது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் சாதுர்யமாக விளையாடினால் எதிரிகளை திசை திருப்ப முடியும் என்று கூறினார். அந்தக் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவுக்கான லிங்க்:
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், தி குவெஸ்டின் ஆஃப் தி டே அதாவது இந்த நாளுக்கான கேள்வி என்று பதிவிட்டுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றவர். அதுமட்டுமல்லாது, உலக சதுரங்க வரலாற்றில் ஃபைடே தரப்பட்டியலில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய வெகு சிலருள் ஆனந்தும் ஒருவர்.
பிரமாண்டமாக துவங்கிய ஒலிம்பியாட்:
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேற்று (ஜூலை.28) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து விழாவை தொடக்கி வைத்தார்.
ஆளுநர் ஆர்.என்ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சௌந்தர்யா, நடிகர் கார்த்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தத் தொடக்கவிழா கலை நிகழ்ச்சிகளையும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ’வணக்கம் சென்னை செஸ்’ பாடலையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.