ஹங்கேரியில் நடைபெற்ற 45ஆவது செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. மகளிர் பிரிவிலும் இந்திய அணியே தங்கம் வென்றது.
செஸ் ஒலிம்பியாட்டில் வரலாறு படைத்த இந்தியா:
தங்க பதக்கம் வென்று கொடுத்த ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அபிஜித் குண்டே, ஹரிகா துரோணவல்லி, திவ்யா தேஷ்முக், வைஷாலி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், வைஷாலி, பிரக்ஞானந்தா ஆகியோர் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் இவர்களுக்கு மொத்தம் 90 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு ஸ்பான்சர் செய்த அதானிக்கு பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "இந்த பயணத்தில் எனது பெற்றோர் தொடங்கி பலரும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
மனம் திறந்து பேசிய பிரக்ஞானந்தா:
எனது தற்போதைய மற்றும் முந்தைய பயிற்சியாளர்கள், எனது முதல் ஸ்பான்சரான ராம்கோ குழுமம், தற்போதைய ஸ்பான்சரான அதானி குழுமம் கடந்த 1 வருடமாக எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அவர்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எனக்கு நிறைய பயிற்சி தேவைப்பட்டது. அதானி குழுமத்தால்தான் அது சாத்தியமானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கெளதம் அதானியை சந்தித்தேன். இந்த ஆண்டு இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். கெளதம் அதானியின் ஆதரவுக்காக நான் அவருக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட்டில் போட்டியில் வென்று சாதனை படைத்த இந்திய வீரர்களை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.