10வது உலகக் கோப்பை செஸ் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரின் வெகு சிறப்பாக நடந்துவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18வயதே ஆன இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேவை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்னும் மோதினர். 


இதில், மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினர். போட்டி தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இரு வீரர்களும் 35 நகர்வுகளுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது.






விதிகள் சொல்வது என்ன..?


முதல் 40 நகர்வுகளுக்கு விதிகளின்படி, 90 நிமிடங்களும், அதன்பின் மீதமுள்ள ஆட்டத்திற்கு 30 நிமிடங்களும் வழங்கப்படும். ஆனால், முதல் சுற்று ஆட்டத்தின் நடுவில் பிரக்ஞானந்தா, 25வது நகர்வுகளுக்கு பிறகு நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். அதுவே, போட்டி டிரா ஆனதிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 


இந்தநிலையில், முதல் சுற்று முடிவிற்கு பிறகு பேசிய பிரக்ஞானந்தா, “ முதல் சுற்று ஆட்டத்தில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நான் எந்த பிரச்சனையும் இருந்ததாக நினைக்கவில்லை. இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவது சுற்று கடினமான போட்டியாகத்தான் இருக்கும். எப்படியாவது கார்ல்சென் தீவிரமாக போராடுவார். நானும் ஓய்வு எடுத்துவிட்டு, புது புத்துணர்ச்சியுடன் நாளை (அதாவது இன்று) மீண்டும் வந்து என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்” என்று தெரிவித்தார். 






இன்றைய போட்டியில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவர். 


இன்றைய போட்டியும் டிரா அடைந்தால்..? 


இன்று நடைபெறும் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தால், வீரருக்கும் 25 நிமிட நேரக் கட்டுப்பாட்டுடன், வியாழன் (நாளை) இரண்டு டை-பிரேக்கர்கள் நடைபெறும். 


இந்த டை-பிரேக்கர்களிலும் முழுமையாக முடிக்க தவறினால், இருவரும் மேலும் இரண்டு டை-பிரேக்கர்களில் விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டு வழங்கப்படும். அதனை தொடர்ந்து டை-பிரேக்கர்களுக்கு ஒவ்வொரு வீரருக்கும் 5 நிமிட நேரக் கட்டுப்பாட்டு கிடைக்கும்.