இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரை அடுத்து இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 2021 சீசன் நேற்று தொடங்கியது. இதனால், நாட்டிலுள்ள விளையாட்டு ரசிகர்களின் கவனமெல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு கால்பந்தின் பக்கம்தான் இருக்கும். ஆனால், கோப்பையை வென்று சாதித்தபோதும் கடந்த மூன்று ஆண்டுகளாக கவனம் பெறாமல் இருக்கின்றது தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் நிலைமை.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான தேசிய சீனியர் கால்பந்து தொடரில் தமிழ்நாடு மகளிர்தான் சாம்பியன். மணிப்பூர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று முதல் முறையாக தேசிய சாம்பியனஷிப்பை தட்டிச் சென்றது தமிழ்நாடு அணி. தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியதும் அப்போதுதான், கோப்பையை வென்றதும் முதல் வாய்ப்பிலேயேதான்!
தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் இந்த சாதனையை மையமாகக் கொண்டுதான் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் ‘பிகில்’ திரைபப்டம் வெளியானது. பிகில் வெளியானது 2019-ம் ஆண்டு. அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகி பட்டிதொட்டி எங்கும் ‘வெறித்தனம்’ ஒலித்தது. ஆனால், ரீல் சிங்கப்பெண்களை கொண்டாடியது போல ரியல் சிங்கப்பெண்கள் இன்று வரை கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கின்றனர்.
இப்போது ஆண்களுக்கான ஐஎஸ்எல் தொடங்கி இருக்கும் இந்த நிலையில், தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்காக நியாயம் கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருகிறது சென்னையின் எஃப்.சி அணியின் ரசிகர் மன்றங்களில் ஒன்றான சூப்பர் மச்சான்ஸ் க்ளப். 3 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்கு தகுந்த வெகுமதியோ, ஊக்கத்தொகையோ, வேலை நியமணமோ வழங்கப்படவில்லை என்பதே அவர்களது குற்றச்சாட்டு.
”மற்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வேலை நியமணம் இருக்கும்போது மகளிர் கால்பந்துக்கு ஏன் இல்லை?”என நியாயம் கேட்கின்றார் மகளிர் அணி கேப்டன் நந்தினி. ஏற்கனவே, ஒரு மைல்கல்லை எட்டியிருக்கும் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அனிக்கு போதுமான ஊக்கமும், உத்வேகமும் தரவில்லை என்றால் இனி வரும் மகளிருக்கு இந்த விளையாட்டில் எப்படி ஆர்வம் இருக்கும் என்பதே அணி வீராங்கனைகளின் கவலையாக இருக்கின்றது.
சாதனை புரிந்த தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு ஆதரவாக முன்னாள் இந்திய அணி வீரர் ராமன் விஜயன், பத்திரிக்கையாளர்கள் டி.என் ரகு, ABPNadu இணைய ஊடக ஆசிரியர் மனோஜ் பிரபாகர் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
கவனிக்குமா தமிழ்நாடு அரசு?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்