தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தேசிய சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது. கடைசியாக, கடந்த 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சப்-ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிகை நடத்தியது. 


இந்தநிலையில், 17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வருகிற 16ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 30 மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த 1,300க்கு மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் தொடரில் அணிகள் பிரிவு, தனிநபர், இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. 


19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.72 ஆயிரமும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 60 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 6.6 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். 


பெண்களுக்கான (ஜூனியர் & யூத்) போட்டிகள் பிப்ரவரி 8 முதல் 11 வரையிலும், ஆண்களுக்கான போட்டிகள் பிப்ரவரி 13 முதல் 16 வரையிலும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், பிப்ரவரி 12ம் தேதி போட்டிகள் இருக்காது எனவும் கூறினர். 


இதுகுறித்து இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் போட்டி மேலாளர் என்.கணேசன் தெரிவிக்கையில், “கொரோனா தொற்று காரணமாக எங்களால் மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளை நடத்த முடியவில்லை. 2019 ஜம்மு நேஷனல்களுக்குப் பிறகு நாங்கள் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியை நடத்துவது இதுவே முதல் முறை” என தெரிவித்தார். 


17 வயதுக்குட்பட்டோரிலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான பிரிவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அங்கூர் பட்டாச்சார்ஜியும், பெண்கள் பிரிவில் சுஹானா சைனியும் (ஹரியானா) முறையே நம்பர்-1 இடத்தைப் பிடித்துள்ளனர். அணிகள் மற்றும் ஒற்றையர் போட்டிகளின் முதல் கட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெறும்.