ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளதும், வரும் வழியில் அவரது மாற்றுத்திறனாளி ரசிகை ஒருவரை சந்தித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான 15வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி கடந்த 29ம் தேதி முடிவடைந்தது. கடந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியின் போது அடுத்த ஆண்டு தொடரில் விளையாடுவீர்களா என்று கேட்டபோது, நிச்சயம் விளையாடுவேன். சென்னையில் விளையாடாமல் ஓய்வுபெறமாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்திருக்கிறார் தோனி.
சென்னை கிளம்பும் முன் ராஞ்சி விமான நிலையத்தில் அவரது மாற்றுத்திறனாளி ரசிகை லாவண்யாவை சந்தித்து உரையாடினார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லாவண்யா, தோனியை சந்தித்தது பற்றி என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அவர் என்னுடைய பெயரின் எழுத்துகளை கேட்ட விதம், என் கைகளைப் பிடித்து குலுக்கியது, ரோனா நஹி என்று என்னிடம் கூறியது, என் கண்ணீரை துடைத்துவிட்டது மிகுந்த பரவசத்தைக் கொடுத்தது. அவரது படத்தை வரைந்ததற்காக எனக்கு நன்றி கூறியதையும், ‘மெஇயின் லே ஜுங்கா’ என்று கூறியதையும் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. அவர் அவரது பொன்னான நேரத்தை எனக்காக செலவிட்டதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. 2022 மே 31 எனக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் தோனியுடன் உரையாடிய சில நொடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாவண்யா பதிவேற்றியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனது மாற்றுத்திறனாளி ரசிகையிடம் தோனி வாஞ்சையுடன் பேசியது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் சச்சின் ரசிகர் சுதிர் தோனியை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.