டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. அத்துடன் நீரஜ்க்கு அணியின் கேப்டன் தோனி வாழ்த்தும் கூறியுள்ளார்.


டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா. 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா இந்தியாவிற்கு முதல் தனிநபர் தங்கப்பதக்கத்தை வென்றார். அதன்பின்னர் இரண்டாவது தனிநபர் தங்கத்தை நீரஜ் சோப்ரா வென்றுள்ளார். 121 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்ஸில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அத்துடன் பரிசு மழையில் நீரஜ் சோப்ரா நினைந்து வருகிறார். 


இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கு தடகளத்தில் முதல் தங்கப் பதக்கத்தைக் வென்றுகொடுத்துள்ளார். டோக்கியோ 2020 மேடையில் இன்று (நேற்று) ஒரு வியக்கத்தக்க பொன்னான தருணம் வெளிப்பட்டது. டோக்கியோவில் ஒலிம்பிக் முடிவடையும் நிலையில், இந்தியா பெருமையுடன் கர்ஜிக்கிறது.


இந்த சிறப்பு மற்றும் வரலாற்று சாதனையை நினைவுகூரும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் ரசிகர்கள் சார்பாக, இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் எம்.எஸ்.தோனி ஆகியோர் இந்திய இராணுவத்தில் இளைய அதிகாரியான நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீரஜ் சோப்ராவின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் மற்றும் மரியாதைக்குரிய அடையாளமாக, சிஎஸ்கே அணி நீரஜ் சோப்ராவுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.






சி.எஸ்.கே செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "டோக்கியோ 2020-ஆம் ஆண்டில் நீரஜ் சோப்ராவின் முயற்சி லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்குவிக்கும். மேலும் விளையாட்டின் எந்த ஒரு துறையிலும் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடவும் சிறந்து விளங்கவும் நம்பிக்கையை கொடுக்கும். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவர் 87.58 மீட்டர் தூரத்தை எறிந்து ஒட்டுமொத்த தேசத்தையும் ஈர்த்துள்ளார்” என்று கூறினார்.


மேலும் சிஎஸ்கே நிர்வாகம், நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண்ணுடன் ஒரு சிறப்பு ஜெர்சியை உருவாக்கும் என்ற அவர், ஒலிம்பிக்கில் இரண்டாவது தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ், அபினவ் பிந்த்ராவுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த பட்டியலில் மேலும் இணைவதைக் கொண்டாடுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்றும் கூறினார்.


Neeraj Chopra Wins Gold: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா !