உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் 22ஆம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்க இருந்தனர். பி.வி.சிந்து, சாய்னா நேவால், லக்ஷ்யா சென், பிரணாய் உள்ளிட்டவர்கள் பங்கேற்க இருந்தனர்.
இந்நிலையில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காயம் காரணமாக பி.வி.சிந்து தற்போது திடீரென்று விலகியுள்ளார். இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி.சிந்து கடந்த வாரம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதன்காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டு பட்டம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் குணம் அடையாத காரணத்தால் இவர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது பேட்மிண்டன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் பி.வி.சிந்து இந்த காயத்துடன் விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பி.வி.சிந்துவின் தந்தை பி.வி.ரமணா ஒரு ஆங்கில விளையாட்டு தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டிகளில் காலிறுதி போட்டியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அதை பொருட்படுத்தாமல் அவர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். தற்போது அவருடைய காயத்திற்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஆகவே அவர் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். இதன்காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார்.
அவர் இந்த காயத்திலிருந்து மீண்டும் பாரீஸ் அல்லது டென்மார்க் ஓபன் தொடரில் மீண்டும் களத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் தொடருக்கு முன்பாக பி.வி.சிந்து சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். இதன்காரணமாக பி.வி.சிந்து நல்ல ஃபார்மில் இருந்தார். இந்தச் சூழலில் அவரின் இந்த விலகல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பி.வி.சிந்து விலகியுள்ள சூழலில் இந்தியா சார்பில் சாய்னா நேவால், லக்ஷ்யா சென், பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்தத் தொடரில் முதல் இரண்டு சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்