ரீமேக் படங்களை இயக்குவதில் தனக்கு பெரிதாக விருப்பமில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கார்த்தியுடன் கைதி, நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் மாஸ்டர், நடிகர் கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகிய படங்களில் இணைந்ததன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 67, கார்த்தியுடன் கைதி-2, கமலுடன் விக்ரம்-3 ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளார். இதனால் லோகேஷ் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து அவர் விலகினார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும், என்னுடைய அடுத்த படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வருவேன் என தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்தவே தான் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக குறிப்பிட்டார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் தனக்கு ரீமேக் பண்ணுவதில் பெரிதாக விருப்பமில்லை என்றாலும், ஒருவேளை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் ஊமை விழிகள், இணைந்த கைகள் தான் என்னுடைய முதன்மை தேர்வாக இருக்கும் என்றும், இதனைத் தவிர ஒரு மூன்று முறை தொடர்ந்து அய்யப்பனும் கோஷியும் படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. யாரும் அதன் ரீமேக் உரிமையை வாங்கவில்லை என்றால் நான் வாங்கி ரீமேக் செய்யலாம் என நினைத்தேன். இதில் பிஜூ மேனன் கேரக்டருக்கு சூர்யாவும், ப்ரித்விராஜ் கேரக்டருக்கு கார்த்தியும் நடிக்க வைக்கலாம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிஜூ மேனன், பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.சச்சிதானந்தம் எழுதி இயக்கிய இப்படம் அந்த ஆண்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னால் மலையாளத்தில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் ரீமேக் ஆனது. தமிழிலும் இப்படத்தை ரீமேக் செய்ய சொல்லி ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர். சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு சிறந்த இயக்குநர், துணை நடிகர், பாடகி, சண்டை இயக்கம் ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்