சமீபகாலமாக இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பேட்மிண்டன் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சாய்னா நேவால், பி.வி.சிந்து என்று வீராங்கனைகள் பேட்மிண்டன் போட்டியில் முன்னணியில் இருக்கும் நிலையில், ஆண்கள் தரப்பு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டின் ஹெல்வா நகரில் உலக பேட்மிண்டன் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித்தொடரில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆண்கள் பிரிவில் அனுபவ வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷயா சென் இருவரும் சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறினர்.
இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் அரையிறுதிப்போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்தும், லக்ஷயா சென்னும் நேற்று இரவு நேருக்கு நேர் மோதினர். 20 வயதே ஆன லக்ஷயா சென் போட்டியின் தொடக்கத்தில் அபாரமாக ஆடினர். அவரது அபார ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கிடாம்பி ஸ்ரீகாந்த் தடுமாறினர். இதனால், போட்டியின் முதல் செட்டை லக்ஷயா சென் 17-21 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சுதாரித்துக்கொண்ட கிடாம்பி சிறப்பாக ஆடி இரண்டாவது செட்டை 21-14 என்ற கணக்கில் வென்றார். இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது செட் நடைபெற்றது. இதில் இருவருமே மாறி புள்ளிகளை கைப்பற்றினர். இறுதியில் மூன்றாவது செட்டை கிடாம்பி 21-17 என்ற கணக்கில் வென்றார். 28 வயதான ஸ்ரீகாந்த் கிடாம்பி இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்கள் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 1983ம் ஆண்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜாம்பவான் பிரகாஷ் படுகோனே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 36 ஆண்டுகளுக்கு பிறகு, 2019ம் ஆண்டு பிரனீத் கடந்த 2019ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது, கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்ரீகாந்திற்கு பல தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பி.வி.சிந்து காலிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஷூ யிங்கிடம் போராடி வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்