இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்துடனே இன்றைய ஆட்டத்தை தொடங்கியது. வெறும் 150 ரன்களே முன்னிலையுடன் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், 9-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமியும், பும்ராவும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட வைத்தனர். அணியின் ஸ்கோர் 189 ஆக இருந்தபோது 92-வது ஓவர் முடிவடைந்திருந்தது.
அப்போது, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்து கொண்டிருந்த பும்ராவிடம் ஏதோ கோபமூட்டும் வகையில் பேசினார். இதனால், கோபமடைந்த பும்ராவும் ஜோஸ் பட்லரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும், ஜோஸ் பட்லருக்கு ஆதரவாக பேசினார். பட்லர் கோபத்தில் தனது ஹெல்மட்டை சக வீரரிடம் எறிந்தார். பின்னர், நடுவர் இருவரையும் சமாதானம் பேசி பும்ராவை பேட் செய்ய அறிவுறுத்தினார்.
இதையடுத்து, 93-வது ஓவரை மார்க்வுட் வீசினார். ஜோஸ் பட்லர் வீண் வம்பிழுத்ததால் கோபத்தில் இருந்த பும்ரா, மார்க் வுட்டின் அந்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார். அப்போது, பும்ராவை உற்சாகப்படுத்தும் விதமாக லார்ட்ஸ் கேலரியில் இருந்த கேப்டன் விராட் கோலி “அட்ரா..! அட்ரா..!” என்பதுபோல ஆவேசமாக கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்த இன்னிங்சில் பும்ரா 64 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். ஷமி மற்றும் பும்ராவின் சிறப்பான ஆட்டத்தால் இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திற்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக 273 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.