இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவரின் தந்தை கிரண்பால் உத்தரபிரதேசத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிப்பு சற்று குறைந்து வீட்டில் ஓய்வு பெற்று வந்தார். அவரை குடும்பத்தார் நன்கு கவனித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
இதனைத்தொடர்ந்து, மீரட்டில் உள்ள ஒரு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், சன் ரைசர்ஸ் ஐததராபாத் அணியின் இடம்பெற்றிருந்த புவனேஷ்வர் குமார் தனது வீட்டில் இருந்து வந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, மும்பையில் பயோபபுளில் இருந்து வருகிறது. இந்த அணியில் புவனேஷ்குமார் இடம்பெறாததால், நல்ல வேளையாக அவரால் தனது தந்தையுடன் கடைசி நேரத்தில் இருக்க முடிந்தது. மும்பையில் பயோ பபுளில் இருக்கும் சக வீரர்கள் அவருக்கு தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.