இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பலர் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். அத்துடன் ஆக்சிஜன் தட்டுப்பாட்டும் ஒரு சில இடங்களில் இன்னும் நீடித்துக்கொண்டுதான் உள்ளது. இதை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மேலும் கொரோனா அறிகுறிகளுடன் பலர் வருவதால் அவர்களுக்கு பரிசோதனை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு முடிவு வர குறைந்தது மூன்று நாட்கள் ஆகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அறிகுறி உடையவர்கள் வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ள ஒரு கிட்டை நேற்று ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. புனேவில் உள்ள மைலேப் என்ற நிறுவனம் தயாரித்த 'கோவிசெல்ஃப்' கிட்டை வீட்டில் பரிசோதனை செய்துகொள்ள ஐசிஎம்ஆர் அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும் இந்த பரிசோதனையை வீட்டிலிருந்து எப்படி செய்து கொள்வது என்பது தொடர்பான நடைமுறையையும் வெளியிடப்பட்டது. 




இந்தச் சூழலில் கோவிஷேல்ஃப் கிட்டை தயாரிக்க மூளையாக செயல்பட்டது ஒரு பெண் விஞ்ஞானிதான். மினல் தக்காவே போஸ்லே என்ற வைராலஜி நிபுணர் இந்தக் கிட் தயாரித்த குழுவிற்கு தலைமை தாங்கினார். இந்தியாவில் கொரோனா முதல் அலை உருவானபோது இந்த பரிசோதனை கிட்டை தயாரிக்கும் பணியில் மைலேப் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த மினல் இந்த பரிசோதனை கருவியை தனது பிரசவத்திற்கு முன்பாக கண்டிபிடிக்கவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார். 


இந்த பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க 3 அல்லது 4 மாதங்கள் எடுக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் மினல் தலைமையிலான குழு வெறும் 6 வாரங்களில் இந்த கோவிசெல்ஃப் கிட்டைத் தயாரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் கூறியது போலவே தனது பிரசவத்திற்கு முந்தைய நாள், மினல் இந்த பரிசோதனை கருவியை மார்ச் 18-ஆம் தேதி பரிசோதனைக்காக ஒப்படைத்தார். மேலும் அன்று இரவு இவர் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்வதற்கு முன்பாக தேசிய மருந்துகள் தர நிர்ணய மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விற்பனைகான ஒப்புதலை பெறவும் இதை சமர்ப்பித்தார். 





அதன்பிறகு இந்தக் கருவி பரிசோதனைக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மைலேப் கோவிசெல்ஃப் கிட் மூலம்  100 கொரோனா பரிசோதனைகளை 1200 ரூபாய்க்கு செய்து முடிக்கலாம். இந்தக் கருவியை கண்டுபிடிக்க காரணமாக இருந்த மினல் தக்காவே போஸ்லே, "இது ஒரு இக்கட்டான தருணம். எனவே இப்போது எனது நாட்டிற்காக இதை செய்யவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மேலும் என்னுடைய பிரசவத்திற்குள் செய்துமுடிக்க வேண்டும் என்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன்" எனத் தெரிவித்தார். 


தன்னுடைய பிரசவ காலத்திலும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்று போஸ்லே நினைத்தால் தான் இந்த கோவிசெல்ஃப் கிட் சரியான நேரத்தில் தயாரானது. தற்போது இந்த கிட்டை வீட்டிலிருந்து மக்களே பரிசோதனை செய்துகொள்ள ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள மக்கள் நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை. அத்துடன் மைலேப் நிறுவனம் ஒரு வாரத்திற்கு 1 லட்சம் கோவிசெல்ஃப் கிட் வரை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது. இதனால் விரைவாகவே இந்த பரிசோதனை கிட் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.