இங்கிலாந்து அணியின் பிரதான வீரரும், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவருமானவர் பென்ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணி உலககோப்பையை வெல்வதற்கு மிகவும் முக்கியமானவராக திகழ்ந்தார். மேலும், பல்வேறு நெருக்கடியான தருணங்களில் பென்ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில், அவர் தன்னுடைய விரலில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீள்வதற்கும், மனரீதியாக நலம் பெற வேண்டும் என்பதற்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் பென்ஸ்டோக்ஸ் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து பயோ-பபுள் சூழலிலே வாழ்ந்து வருகிறார். கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக நியூசிலாந்து சென்றார். அதனால், அந்த தொடரில் அவர் விளையாடவில்லை. பின்னர், பென்ஸ்டோக்சின் தந்தை காலமானார்.




பின்னர் அவர் காயம் காரணமாக இந்தாண்டு கோடைகாலம் வரை அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். பின்னர், காயத்தில் இருந்து மீண்டு கவுண்டி போட்டிகளில் ஆடி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றும் அசத்தினார்.


இந்த நிலையில், பென்ஸ்டோக்சிற்கு மீண்டும் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. தந்தை மரணம், காயம், நீண்ட நாட்களாக பயோ-பபுள் சூழலில் இருப்பது பென் ஸ்டோக்சிற்கு மனரீதியாக கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தன்னுடைய குடும்பத்தினருடன் சிறிதுகாலம் அவகாசம் எடுத்துக்கொள்ள அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் காலவரையற்ற ஓய்வு பெறுவதாக பென்ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.




பென்ஸ்டோக்ஸ் முடிவை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பென்ஸ்டோக்ஸ் முடிவிற்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம். சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருப்பது அவருக்கு நலமாக இருக்கும். தன்னுடைய உணர்வுகளையும், நலத்தையும் வெளிப்படையாக கூறுவதில் ஸ்டோக்ஸ் துணிச்சலனாவர். எங்களுடைய வீரர்களின் மனரீதியான, உடல்ரீதியான நலன் மிகவும் முக்கியம். கொரோனா சூழலுக்கு மத்தியில் எங்கள் வீரர்கள் போட்டிக்கு தயாராக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஸ்டோக்ஸ் தேவையான ஓய்வை எடுத்துக்கொண்டு அணிக்கு திரும்புவார்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ஸ்டோக்சின் இந்த திடீர் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 4-ந் தேதி இந்தியாவிற்கு எதிரான தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ள சூழலில் பென்ஸ்டோக்ஸ் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.




பென்ஸ்டோக்ஸ் இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 631 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 258 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 10 சதம், 24 அரைசதம் அடங்கும். 101 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதங்களுடன் 2 ஆயிரத்து 871 ரன்களை குவித்துள்ளார். 34 டி20 போட்டிகளில் ஆடி 442 ரன்களையும் எடுத்துள்ளார். 43 ஐ.பி.எல். போட்டிகளில் 2 சதங்களுடன் 920 ரன்களை குவித்துள்ளார்.


மேலும், டெஸ்ட் போட்டிகளில் 163 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 74 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.