ஜூலை மாதத்தில் முதல் 10 நாட்களுக்குள் மூன்று முன்னாள் இந்திய கேப்டன்களின் பிறந்தநாள் வருகிறது. ஜூலை 7ஆம் தேதி தோனிக்கும், 8ஆம் தேதி கங்குலிக்கும், 10ஆம் தேதி சுனில் கவாஸ்கருக்கும் பிறந்தநாள் வருகிறது. அந்தவகையில் ஜூலை 8ஆம் தேதியான இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் உலகில் மகாராஜா, பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா, ராயல் பெங்கால் டைகர், காட் ஆஃப் ஆஃப்சைடு எனப் பல பட்டப் பெயர்கள் இவருக்கு உள்ளது. எனினும் இவரை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாசமுடன் தாதா என்று தான் அழைப்பார்கள். அந்தப் பெயருக்கு ஏற்ப தன்னுடைய இடது கை ஆட்டத்தாலும் ஆக்ரோஷத்தாலும் கிரிக்கெட் களத்தை இவர் அசர வைத்தார்.
இன்று அவருடைய பிறந்தநாளில் சிறப்பான விஷயங்கள் மற்றும் தருணங்கள் என்னென்ன.. பார்க்கலாம்.
1989 அண்ணனுக்கு பதிலாக ரஞ்சி கோப்பை விளையாடியது:
1989ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அப்போது டெல்லி மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ரஞ்சி கோப்பை தொடர் முழுவதும் களமிறங்காத கங்குலி தன்னுடைய அண்ணன் சிநேகஷிஷ் கங்குலிக்கு பதிலாக பெங்கால் அணியில் களமிறங்கினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் போட்டி முடிந்த 10 நாட்களில் கங்குலிக்கு 12ஆம் வகுப்பு இறுதி தேர்வு இருந்தது. இந்தப் போட்டியில் கங்குலி 22 ரன்கள் அடித்திருந்தார்.
1992 உலகக் கோப்பைக்கு சச்சினுக்கு பேட் வழங்கியது:
1992ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சவுரவ் கங்குலி முதல் முறையாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அந்தப் போட்டியில் வெறும் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் இவர் மீது சில புகார்களும் வந்தன. இதனால் இவர் 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்தச் சூழல் இடம் கிடைக்காது தொடர்பாக வருத்ததில் இருந்த கங்குலிக்கு அவருடைய நண்பர் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்தார். அத்துடன் கங்குலியின் பேட்டை உலகக் கோப்பை தொடருக்காக சச்சின் பெற்று சென்றுள்ளார். அவர்கள் இருவரும் மிகவும் கனமான பேட் பயன்படுத்தி வந்தனர். இதனால் இருவரும் அடிக்கடி தங்களின் பேட்களை பரிமாறி கொள்வது வழக்கமாக இருந்தது.
2002 லார்ட்ஸ் கங்குலி-லக்ஷ்மண்-ஹர்பஜன்:
2002ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நாட்வெஸ்ட் தொடரின் இறுதி ஒருநாள் போட்டி நடைபெற்றது இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என்று இருந்தப் போது இந்திய அணி விக்கெட்கள் இழந்து சற்று தடுமாறியது. அப்போது யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்கள். இந்தப் போட்டியின் முடிவில் கங்குலி தன்னுடைய ஜெர்ஸியை கலற்றி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பால்கனியில் இருந்து சுழற்றுவார். அப்போது அவரின் அருகே இருந்த லக்ஷ்மண் கங்குலியை ஜெர்ஸியை கழற்றவிடாமல் பிடித்து இழுத்துள்ளார். பின்னாடி இருந்த ஹர்பஜன் சிங் நானும் ஜெர்ஸியை கழற்றி சுற்றவா என்று கேட்டதாக கங்குலி ஒரு முறை கூறியுள்ளார். மேலும் கங்குலியின் இந்தச் செயல் குறித்து அவருடைய மகளும் அவரிடம் கேட்டுள்ளார்.
2007 லக்ஷமண் குளியலால் கங்குலி உள்ளே சென்றது:
2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடரில் கங்குலி நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். அது அவருக்கு கம்பேக் சீரிஸ் ஆக இருந்தது. அதில் மூன்றாவது டெஸ்ட் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் இந்திய ஃபில்டிங்கின் போது 12 நிமிடங்களுக்கு மேல் வெளியே இருந்தார். இதனால் அவர் வழக்கமாக விளையாடும் நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதனால் நம்பர் 5 வீரரான லக்ஷ்மண் களமிறங்க வேண்டிய சூழல் உருவானது. எப்போதும் லக்ஷ்மண் தன்னுடைய பேட்டிங் வருவதற்கு முன்பாக குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். அதேபோல் சச்சின் களத்திற்குள் சென்றவுடன் லக்ஷ்மண் குளிக்க சென்றுள்ளார். இதன் காரணமாக 6-ஆவது இடத்தில் களமிறங்க வேண்டிய கங்குலி அவசர அவசரமாக தயாராகி உள்ளே சென்றார். அவசரமாக உள்ளே சென்று இருந்தாலும் டிராவிட் உடன் ஜோடி சேர்ந்து 46 ரன்கள் எடுத்தார். தன்னுடைய கம்பேக் சீரிஸில் 3 போட்டிகளில் 2 அரை சதத்துடன் 214 ரன்கள் விளாசி கங்குலி அசத்தினார்.
2005 தோனியை நம்பர் 3 அனுப்பிய கதை:
2004-ஆம் ஆண்டு கிழக்கு பகுதி கிரிக்கெட் அணிக்கு களமிறங்கிய தோனியை முதலில் பார்த்த கங்குலி இவருடை சிக்சர் விரட்டும் திறனை பார்த்து வியந்துள்ளார். இதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கங்குலி தோனிக்கு வாய்ப்பு வழங்கினார். அந்தத் தொடரில் தோனி நம்பர் 7 இடத்தில் பேட்டிங் செய்தார். இதனால் சரியாக அவருடைய திறனை நிரூபிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் தொடர் நடைபெற்றது. இதில் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் தோனி 7ஆவது இடத்தில் களமிறங்கினார். அப்போது வெறும் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு முந்தைய நாளில் விளையாடும் அணி மற்றும் வீரர்களின் பேட்டிங் வரிசை இறுதி செய்யப்பட்டது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் சேவாக் களமிறங்கினர். அந்த சமயத்தில் நம்பர் 3 இடத்தில் நீ தான் இன்று களமிறங்க போகிறாய் என்று இவர் தோனியை அழைத்து கூறியுள்ளார். அந்தப் போட்டியில் 4ஆவது ஓவரில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய தோனி 148 ரன்கள் விளாசினார். தோனியை 3ஆவது இடத்தில் அனுப்பியது குறித்து கங்குலி,”7ஆவது இடத்தில் ஒரு வீரரை களமிறக்கினால் அவருடைய திறமை முழுவதும் பயனற்றதாக அமைந்துவிடும். நல்ல வீரர்களை முன்னே இறக்கினால் தான் அவர்களுடைய முழு திறனும் வெளிப்படும். அப்படி தான் சேவாக்கை நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்க சொன்னேன்” எனக் கூறினார். அந்தப் போட்டி தான் தோனியின் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
ஹர்பஜன் சிங் செய்த ஏப்ரல் ஃபூல்:
2005ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இருந்தது. இதனால் ஏப்ரல் 1ஆம் தேதி இந்திய வீரர்கள் பயிற்சி செய்தனர். அப்போது ஹர்பஜன் சிங் கங்குலியை ஏப்ரல் ஃபூல் ஆக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கங்குலி தனது அணி வீரர்கள் குறித்து தவறாக பேசியதாக சில செய்தித்தாள் கட்டிங்கை தயார் செய்துள்ளார். அதை வைத்து இன்று வீரர்கள் யாரும் பயிற்சிக்கு வரமாட்டார்கள் அத்துடன் நாளைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று கங்குலியிடம் கூறியுள்ளார். இதனால் கடும் சோகம் அடைந்த கங்குலி, “நான் அப்படி கூறவே இல்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் உடனடியாக என்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ எனக் கூறினார். அத்துடன் அவர் தன்னுடைய கண்களில் கண்ணீர் மல்க பேசியுள்ளார். அதன்பின்னர் ஹர்பஜன் சிங் இது பொய் மற்றும் ஏப்ரல் ஃபூல் ஆக்க திட்டமிடப்பட்டது என்று கூறியுள்ளார்.
கங்குலியை பொறுத்தவரை அவர் எப்போதும் தன்னுடைய வீரர்களை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அவருடைய கேப்டன்ஷிப் காலத்தில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், நெஹ்ரா, தோனி போன்ற பல வீரர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளித்து கொண்டே இருந்தார். இதனால் தான் அவருடைய வீரர்கள் எப்போதும் அவரை கொண்டாடுவார்கள். தோனியே ஒருமுறை அவருடைய சிறந்த கேப்டன் கங்குலிதான் என்று கூறியிருந்தார்.
மேலும் படிக்க:38வயது... இடைவெளி விட்டு கம்-பேக்... ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்!