அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை டி-20 தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார் என பிசிசிஐ செயலாளரர் ஜே ஷா அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். பிசிசிஐ தலைவராக கங்குலி, இந்திய அணி ஆலோசகராக தோனி, கேப்டனாக கோலி என முக்கிய கிரிக்கெட்டர்கள் ஒரு பிரமாண்ட கிரிக்கெட் தொடருக்காக ஒன்று கூடுவதால் இந்திய அணி மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐக்கு புகார் வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஆதாயம் தரும் இரண்டு பதவிகள் வகிக்க கூடாது என்பதை சுட்டிக்காட்டி இந்த புகார் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகாரை நிராகரித்துள்ள பிசிசிஐ, ஐபிஎல் தொடரை அடுத்து டி-20 உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், தோனி இந்திய அணியின் ஆலோசகராக இருப்பதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும், ஒரே நேரத்தில் ஆதாயம் தரும் இரண்டு பதவிகளில் தோனி இருப்பார் என்பதற்கான பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணியின் ஆலோசகராக தோனி தேர்வு செய்யப்பட்டதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ”தோனியின் அனுபவம் டி-20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி எதிர்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று தோனி ஆலோசகராக இருக்க ஒப்புக் கொண்டதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என கங்குலி தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் அணியின் இடம் பிடித்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில், துணை கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.