கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் திருமணம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



 

இந்த நிலையில் சுப முகூர்த்தநாளான இன்று கடலூரில் பிரசித்தி பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர். எப்பொழும் கோவில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறும் ஆனால் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக யாருக்கும் அங்கே திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை. இதையடுத்து திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு உள்ள சாலையில் நூறுக்கும் மேற்பட்ட ஜோடிகள் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டனர். அடுத்தடுத்து அங்கு திருமணம் நடந்த காரணத்தினால் அந்த சாலை முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி திருவிழா போல் காட்சியளித்தது இதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன.




 

மேலும் திருவந்திபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களிலும் 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த பகுதியில் இன்று ஒரே நாளில் 150 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நடைபெற்ற பெரும்பாலான திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படுள்ளது. அங்கே திருமணத்திற்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகமானதால் அங்கு காவல்துறை சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், முககவசம் அணியாதவர்கள் முககவசம் அணியுமாரும் ஒலிப்பெருக்கி வைத்து கூறப்பட்டது, காவல்துறை எவ்வளவு எடுத்து கூறினாலும் காவல் துறையினரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



 

கடலூரில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது இந்நிலையில் இவ்வாறு உள்ள சூழலில் இவ்வாறு திருமணத்திற்கு என இவ்வளவு கூட்டம் கூடுவது மேலும் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் வருவாய் துறையினர் என எத்துணை பேர் நியமிக்கப்பட்டு இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்கள் எடுத்தாலும் கொரோனாவினை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் பொதுமக்கள் தான் ஒத்துழைக்க வேண்டும், இவ்வாறு பொது இடங்களில் கூடினால் தொற்று பரவும் என்பதனை மக்கள் முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா பரவும் காலகட்டத்தில் இவ்வாறு கூடினால் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகிவிடும்.