ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி படுதோல்வி அடைந்து. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்தும் இந்திய அணி, உள்ளூர் தொடர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது. ஆனாலும், ஐசிசி தொடரில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் சம்மேளனத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அணியில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம்:
இந்நிலையில் தான், வரும் புதன்கிழமை அன்று பிசிசிஐ நிர்வாகத்தின் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தேர்வுக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இதில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு விதமான கிரிக்கெட் போட்டிக்கும் ஒவ்வொரு விதமான கேப்டன் மற்றும் பயிற்சியாளரை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு கேப்டன், இரண்டு கோச்:
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் இருபது ஓவர் போட்டிகளுக்கு மட்டும் புதிய பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ரோகித் சர்மாவிற்கு 35 வயதாவதால் அவர் நீண்ட நாட்களுக்கு வீரராக அணியில் தொடர முடியாது என்பதால், இருபது ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை முன்னிலைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதோடு, ராகுல் டிராவிட்டை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக மட்டும் செயல்பட வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. பீல்டிங் கோச் டி. திலிப் உள்ளிட்ட சிலர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்களுக்கான ஒப்பந்தம்:
வீரர்களுக்கான புதிய ஒப்பந்த தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும், அதில் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவின் ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவிற்கு, உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என தெரிகிறது. தொடர்ந்து, இந்திய அணியின் ஸ்பான்ஷர்ஷிப்பில் இருந்து விலக பைஜுஸ் நிறுவனம் முடிவு செய்துள்ள நிலையில், புதிய ஸ்பான்ஷர் குறித்து விவாதிக்கப்படலாம். வீரர்கள் அடிக்கடி காயமடைவது குறித்தும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் இரவு - பகல் டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்தும், ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ முக்கிய முடிவு எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.