ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற இருக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் தயாராகிவருகின்றன. அந்தவகையில், இலங்கை அணியும் தயாராகிவருகிறது. 


எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் இலங்கை இருப்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கரன். பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார். 


பாஸ்கரன் என்ற பெயரை இந்திய கபடியிலிருந்து பிரிக்கவே முடியாது. தேசிய அளவிலான கபடி போட்டிகளில் 1993 முதல் 1996ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு கபடி அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு பாஸ்கரன் முக்கிய காரணம். இவர் இந்திய கபடி அணியின் வீரராக மட்டுமின்றி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.




ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் கடந்த 1994ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணியின் வீரராக களமிறங்கி இந்தியா தங்கம் வெல்வதற்கு காரணமாக இருந்தார்.  அதனைத் தொடர்ந்து, 1995ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கபடி அணியின் கேப்டனாக களமிறங்கினார். இப்போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. 


தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஸ்கரன் அந்த அணிக்கு எதிராக கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த கபடி தொடரில் இந்தியாவை வழிநடத்தியவர். 




2009ஆம் ஆண்டு தாய்லாந்து, 2010ஆம் ஆண்டு மலேசியா, 2014ஆம் ஆண்டு இந்திய அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய பாஸ்கரன்,புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்போட்டியில் அந்த அணி தங்கம் வென்றது. 


இதையடுத்து 2016ஆம் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்போட்டியிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. புரோ கபடி லீக் 5ஆவது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.




தற்போது இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஸ்கரன் அந்த பொறுப்பில் ஒரு வருடம் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இலங்கை கபடி அணியின் பிரதான பயிற்சியாளருடன் இணைந்து பணியாற்றும் வகையிலேயே பாஸ்கரன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கபடி சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை அணிக்கு தமிழர் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த அணியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வீரர்கள் தமிழர்கள் என்பதனால், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே பாஸ்கரன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என இலங்கை கபடி சங்கத்தின் தலைவர் அநுர பத்திரன தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண