ஜிம்பாவேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 1 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.ஜூலை 7-ம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி, 468 ரன்களை எடுத்தது.


இந்த இன்னிங்ஸின்போது, ஜிம்பாவே பெளலர் ப்ளெஸ்ஸிங் முசாராபானி வீசிய பந்தை எதிர்கொண்ட வங்கதேச பேட்ஸ்மென் தஸ்கின் அகமது, மைதானத்தில் நடனமாடினார். ஸ்டைலாக அவர் நடனமாடியதை பார்த்து முசாராபாணி கமெண்ட் செய்ததால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. நேருக்கு நேர் மோதிக்கொண்ட வீரர்கள், ஒருவரை ஒருவர் பற்றி கமெண்ட் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 






இந்த சம்பவத்தினால், போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதே போல, சில வாரங்களுக்கு முன்பு வங்கதேச டி-20 கிரிக்கெட் லீகின்போது, அம்பயரிடம் ஷகிப்-அல்-ஹசன் வம்பிழுத்து ஸ்டம்புகளை தூக்கி எறிந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. 






ஆனால், இப்படி கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச கிரிக்கெட் அணியினர் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2018-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் ஒரு போட்டியில் இலங்கையை வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி, போட்டி முடிந்தவுடன் "பாம்பு நடனம்" ஆடி இலங்கை வீரர்களை வெறுப்பேற்றினர்.  இந்த சம்பவம் வைரலானது. வெற்றியோ, தோல்வியோ, கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணி வீரர்களின் நடவடிக்கைகள் பல நேரங்களில் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. கிரிக்கெட்டில் மெல்ல மெல்ல தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்து கொள்ளும் அளவிற்கு முன்னேறி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி, இது போன்ற செயல்களால் முகம் சுளிக்க வைக்கிறது. வங்கதேச அணியின் கிரிக்கெட் வளர்ச்சியை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தாலும் இது போன்ற செயல்களால் வங்கதேச அணிக்கு ‘ஹேட்ரட்’ அதிகமாகி வருகின்றது மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது. புரிந்து கொண்டு பொறுப்போடு நடந்து கொள்வார்களா வங்கதேச அணி வீரர்கள்?