Satwik-Chirag Badminton: ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டிக்கான உலக தரவரிசைப் பட்டியலில், முதலிடம் பிடித்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக்-சிராக் ஜோடி பெற்றுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் சாத்விக் - சிராக் ஜோடி:
இந்திய பேட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர், ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டிக்கான உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினர். அண்மையில் வெளியான புள்ளிப்பட்டியலில் 92 ஆயிரத்து 411 புள்ளிகளுடன், இந்திய ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது. இரட்டையர் பிரிவிற்கான தரவரிசைப்பட்டியலில், இந்திய ஜோடி முதலிடம் பிடிப்பது இதுவே முதன்முறையாகும். அண்மையில் சீனாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில், சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில், இந்தியா தங்கம் வென்றது அதுவே முதல்முறையாகும். அதைதொடர்ந்த, தற்போது தரவரிசைப் பட்டியலிலும் புதிய சாதனை படைத்துள்ளது.
தரவரிசைப் பட்டியலில் இந்தியர்கள்:
முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்தின் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். அதன்படி, பிரகாஷ் படுகோனே, சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் மட்டுமே அந்த பெருமையை பெற்று இருந்தனர். அந்த வரிசையில் தற்போது சாத்விக் - சிராக் ஜோடி சேர்ந்துள்ளது.
தொடரும் வெற்றி:
ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாத்விக் மற்றும் சிராஜ் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 18 தொடர்களில் விளையாடி 92 ஆயிரத்து 411 புள்ளிகளை சேர்த்துள்ளது. ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டியில், சாத்விக்-சிராக் ஜோடி தென் கொரியாவின் சோய் சோல்கியூ மற்றும் கிம் வோன்ஹோ ஜோடியை நேர் செட்களில் தோற்கடித்து தங்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முகமது ரியான் ஆர்டியான்டோவை விட, இந்திய ஜோடி 2000 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளது.
2023ல் சாத்விக் - சிராக் ஜோடி:
ஆசிய விளையாட்டில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதோடு, இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வெல்லவும் சாத்விக் - சிராக் ஜோடி முக்கிய பங்களித்தது. நடப்பாண்டில் இந்த ஜோடி 5 தொடர்களை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதில், சுவிஸ் ஓபன் சூப்பர் 300, பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப், இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000, கொரியா ஓபன் சூப்பர் 500 மற்றும் ஆசிய விளையாட்டு தங்கம் ஆகியவை அடங்கும்.
தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர், வீராங்கனைகள்:
இந்திய நட்சத்திர வீராங்கனயான பி.வி.சிந்து ஆசிய விளையாட்டில் பதக்கத்தைத் தவறவிட்டாலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே நேரத்தில் கான்டினென்டல் ஷோபீஸில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற எச்.எஸ்.பிரணாய் ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்தை பிடித்துள்ளார். ஆடவர் குழு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முயற்சியில் தனது பங்கை ஆற்ற, தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற லக்ஷ்யா சென், ஒரு இடம் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார். கிடாம்பி ஸ்ரீகாந்த் 20வது இடத்தைப் பிடித்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி ஜோடி ஒரு இடம் முன்னேறி 16வது இடத்தைப் பிடித்துள்ளது.