பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, ஆகஸ்ட் 26 அன்று, ஜப்பானின் யுகோ கோபயாஷி மற்றும் டகுரோ ஹோக்கி ஜோடியை 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கத்தை உறுதி செய்த முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்த இந்திய ஜோடி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. உலக அரங்கில் இந்த ஜோடி சிறப்பாக விளையாடி வருகின்றது.
உலகின் நம்பர் 2 இடத்தில் உள்ள இந்தியாவும் நடப்பு சாம்பியனான ஜப்பானும் போட்டியில் ஒருவரையொருவர் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட், 22-22 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்ட நிலையில், சிராக் சிறப்பாக விளையாடி அந்த செட்டை இந்தியாவுக்கு பெற்று தந்தார்.
இரண்டாவது செட்டை ஜப்பான் கைப்பற்றியது. இறுதியாக, கடைசி செட்டை இந்தியா கைப்பற்றியது. சாத்விக் மற்றும் சிராக் ஆகியோர் முதல் சுற்றில் தங்கப் பதக்கத்தை வென்ற தைவானின் லீ யாங் மற்றும் வாங் சி-லின் ஆகியோரை தோற்கடித்தனர்.