இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நின்றது. இதனால் இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியை எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இந்த இங்கிலாந்து தொடர் ஆகிய இரண்டிலும் இந்திய அணி பின்னுக்கு தள்ளப்பட்டது. இந்த இரண்டு முறையும் இந்திய அணி சிறப்பாக மீண்டு வந்தது. இதனால் விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணி சிறந்த கிரிக்கெட் அணி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தவித மாற்ற கருத்தும் இல்லை. ஆனால் தற்போது இருக்கும் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமானது. அது சச்சின், கங்குலி, திராவிட்,சேவாக்,லக்‌ஷ்மண் ஆகியோர் கொண்ட அணிக்கு ஒரு போதும் ஈடாகாது. அந்த அணி தான் இந்திய அணியின் சிறப்பான பேட்ஸ்மேன்களை கொண்ட அணி.


தற்போது உள்ள இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்கள். இவர்கள் இருவருக்கு அடுத்தப்படியாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒரு வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம். எதிர்கால இந்திய அணியில் அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக நிச்சயம் வலம் வருவார். என்னை பொருத்தவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டே அதிக வெற்றிகளை பெற்று வருகிறது" எனக் கூறியுள்ளார். 

ஷேன் வார்ன் கருத்திற்கு தரவுகள் கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியில் ஃபென்டாஸ்டிக் ஃபைவ்(Fantastic Five ) என்று அழைக்கப்படுபவர்கள் சேவாக், திராவிட், சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் தான். ஏனென்றால் கிட்டதட்ட இந்திய டெஸ்ட் அணியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஐந்து பேரின் பேட்டிங் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த ஐவர் கூட்டணி தான் கங்குலி கேப்டன்ஷிப்பில் தொடங்கி தோனி கேப்டன்ஷிப்  வரை சிறப்பாக விளையாடியது.  

ஃபென்டாஸ்டின் ஃபைவின் பேட்டிங் செயல்பாடு:

வீரர்கள்   டெஸ்ட் போட்டிகள் ரன்கள் சராசரி அரை சதம்  சதம் 
சச்சின்  200 15,921 53.79 68 51
கங்குலி 113 7212 42.17 35 16
திராவிட்  164 13,228 52.31 63 36
லக்‌ஷ்மண் 134 8781 45.97 56 17
சேவாக் 104 8456 49.34 32 23

தற்போதைய இந்திய வீரர்களின் பேட்டிங் செயல்பாடு:


வீரர்கள்   டெஸ்ட்  போட்டிகள் ரன்கள் சராசரி அரைசதம்  சதம்  
கோலி 96 7765 51.08 27 27
ரஹானே 78 4756 39.63 24 12
ரோகித்  43 3047 46.87 14 18
புஜாரா  90 6494 45.41 31 8
கே.எல் ராகுல் 40 2321 35.16 12 6

இப்படி இவர்களின் தரவுகளும் ஷேன் வார்ன் கூறியதை தெளிவாக உணர்த்துகிறது. தற்போதைய இந்திய பேட்ஸ்மேன்களில் யாரும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடவில்லை என்றாலும் அவர்களுடைய சராசரியை ஒப்பிட்டு பார்த்தாலே இவர்களுடைய பேட்டிங் மற்றும் அவர்களுடைய பேட்டிங்கிற்கான வித்தியாசம் தெரியும். இவர்கள் அனைவரும் வெவ்வேறு கால கட்டங்களில் விளையாட அணிகள் என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை இந்த 5 வீரர்கள் ஒரே காலத்தில்  டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில்  கலக்கிய ஜாம்பவான்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. 

மேலும் படிக்க: 'என்னை எப்படியாவது காப்பாத்துப்பா' மைதானத்தில் வடிவேலுவாக மாறிய பூனை...!