2023 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய ஓபன் பெருமையைப் பெறுவதற்காக வீரர்கள் மோதிக்கொள்ளும் தொடரின் தொடக்க நாளில் முக்கிய வீரர்கள் வெற்றிக்கணக்கை துவங்கி இரண்டாவது சுற்றுக்கு சென்றுள்ளனர். நடப்பு சாம்பியனான ரஃபேல் நடால் 21 வயதான ஜாக் டிராப்பருடன் போராடி வெற்றி பெற்றார். இதற்கிடையில், ஸ்வியாடெக், எம்மா ராடுகானு ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
போராடி வென்ற ரபேல் நடால்
2022 ஆஸ்திரேலிய ஓபனை வென்ற ரஃபேல் நடால் கிரேட் பிரிட்டனின் டிராப்பரை நான்கு செட்களில் போராடி தோற்கடித்தார். முதல் செட்டை வென்ற நடால், இரண்டாவது செட்டில் தோல்வியடைந்து, மூன்றாவது செட்டில் போராடி வென்று தொடர்ந்து நான்காவது சேட்டை வென்று ஆட்டத்தை கைப்பற்றினார். 7-5, 2-6, 6-4, 6-1 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றார். "எனக்கு ஒரு வெற்றி தேவை, அதுதான் முக்கிய விஷயம். எப்படி வந்தது என்பது முக்கியமில்லை" என்று போட்டிக்குப் பிறகு நடால் கூறினார். அவர் அடுத்ததாக அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை எதிர்கொள்கிறார்.
இகா ஸ்வியாடெக் நேர் செட்டில் வெற்றி
முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் ஜூல் நீமியரை தோற்கடித்தார், அவர், 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இருப்பினும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய அவர், மேலும் போட்டியில் ஆழமாக செல்ல கூடுதல் தீவிரம் தேவை என்று கூறினார். 2022 பிரெஞ்சு மற்றும் யுஎஸ் ஓபன் வெற்றியாளர் இப்போது இரண்டாவது சுற்றில் கமிலா ஒசோரியோவை எதிர்கொள்கிறார்.
எம்மா ராடுகானு
முன்னாள் யுஎஸ் ஓபன் சாம்பியனும் இங்கிலாந்தின் வீரங்கனையும் ஆன எம்மா ரடுகானுவுக்கு எதிரான இரண்டாவது சுற்றில் கண்ணைக் கவரும் வகையில் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் கத்தரினா சினியாகோவாவை வீழ்த்தினார். இதற்கிடையில், ராடுகானு தனது தொடக்க சுற்றில் ஜெர்மனியின் தமரா கோர்பாட்ச்சை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
டேனியல் மெட்வெடேவ் எளிதான வெற்றி
இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியாளரான டேனியல் மெட்வெடேவ் தனது தொடக்கச் சுற்றில் அமெரிக்க வீரர் மார்கோஸ் ஜிரோனை வீழ்த்தி தனது தொடரை வெற்றிகரமாக தொடங்கினார். 1 மணி நேரம் 36 நிமிடங்களில் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரர் அமெரிக்க வீரரை வீழ்த்தினார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொள்கிறார். போட்டியின் இரண்டாவது நாளான இன்று, நோவக் ஜோகோவிச் போன்றவர்கள் தங்கள் முதல் போட்டியில் ஆட உள்ள நிலையில், அதிரடி நிரம்பிய நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.