ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வதேவ் ஆகிய இருவரும் மோதினர். இந்தப் போட்டியில் தொடக்கத்தில் முதல் இரண்டு செட்களையும் மெட்வதேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றார்.


அதன்பின்னர் சுதாரித்து கொண்ட ரஃபேல் நடால் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றை வென்று அசத்தினார். இதனால் இரண்டு பேரும் தலா 2 செட்களை வென்று இருந்தனர். இதன்காரணமாக போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க 5ஆவது செட் நடைபெற்றது. இந்த ஐந்தாவது செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியை 2-6,6-7,6-4,6-4,7-5 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வென்று அசத்தினார். அத்துடன் தன்னுடைய 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார். 


 






இந்தப் போட்டியை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற ரஃபேல் நடால், "அனைவருக்கும் காலை வணக்கம். மெட்வதேவ் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிச்சயம் இரண்டு முறையாவது அவருடைய கையில் இனிமேல் இந்த சாம்பியன் பட்டம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிமிக்க போட்டியாக இதை நான் கருதுகிறேன். இந்த போட்டியின் போது ரசிகர்களாகிய நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இந்த ஆதரவிற்கு நான் எப்போதும் தலை வணங்குகிறேன். இது தான் என்னுடைய கடைசி ஆஸ்திரேலியன் ஓபன் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அளித்த ஆதரவை பார்க்கும் போது மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என்று தோன்றுகிறது.  என்னால் முடிந்த வரை அடுத்த வருடம் மீண்டும் வர முயற்சி செய்கிறேன்" எனத் தெரிவித்தார். 


 






 


நடாலுக்கு முன்பாக பேசிய மெட்வதேவ், "5 மணி 30 நிமிட டென்னிஸ் விளையாட்டிற்கு பிறகு பேசுவது மிகவும் கடினம். நான் ரஃபேல் நடாலை பாராட்டுகிறேன். அவர் இன்று செய்தது ஒரு மகத்தான சாதனை. என்னால் முடிந்த வரை நான் முயற்சி செய்தேன். ஆனால் இறுதியில் நான் மிகவும் சோர்வு அடைந்துவிட்டேன். முதல் இரண்டு செட்களுக்கு பிறகு ரஃபேல் நடால் தன்னுடைய ஆட்டத்தை மிகவும் உயர்த்தினார். அவருடைய ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். எனினும் அவர் சிறப்பாக விளையாடினார்" எனக் கூறினார். 


 






ஏற்கெனவே நடால் மற்றும் மெட்வதேவ் யுஎஸ் ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தனர். அப்போதும் மெட்வதேவை நடால் வீழ்த்தியிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் மெட்வதேவை நடால் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:17 ஆண்டுகள்.. 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.. மீண்டும் ஃபீனிக்ஸாய் திரும்பிவந்த ரஃபேல் நடால்!