இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது சிலர் மத ரீதியிலான தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் குறித்து பலரும் தவறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். முகமது ஷமிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் ஆதரவு அளித்தனர். அத்துடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும் ஆதரவு அளித்தனர். 


இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஏபிபிக்கு நேர்காணல் அளித்தார். நேர்காணலில் விராட் கோலி கூறியதாவது;    


“என்னைப் பொறுத்தவரை, மதத்தின் பெயரால் பிறரின் மீது வெறுப்பை உமிழ்வது பரிதாபகரமான விஷயம். எவர் ஒருவருக்கும் ஒரு குறிப்பிட்ட சூழல் குறித்த கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில், ஒருவர் மீது மதம் சார்ந்து பாகுபாடு காட்டுவதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. அது முதுகெலும்பில்லாத  கோழைகளின் செயலாகும்.   


தனிமனிதனாக என்ன செய்கிறோம் என்ற புரிதல் இத்தகையவர்களுக்கு இல்லை. களத்தில் கிரிக்கெட் வீரர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள் குறித்தும், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டத்தின் சிக்கலான தருணத்தில் இருந்து அணியை மீட்டத்தில் முகமது ஷமியின் பங்களிப்பு குறித்தும் மற்றவர்கள் சிந்திக்க வேண்டும்” என்றார் 


மேலும், "டெஸ்ட் கிரிக்கெட்டில், பந்துவீச்சுக்கு தயாராகும் ஷமியின் ஓவ்வொரு அசைவிலும் தேசப்பற்று வெளிப்படும். ஷமியின் தேசபக்தி உணர்வு குறித்த கேள்விக்குப் பதில் சொல்லி என் வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை. ஷமியும் அதனை விரும்பவில்லை. ஒட்டுமொத்த அணியும் அவருக்கு துணை நிற்கிறது. 200 சதவீதம் ஆதரவளிக்கிறது" என்று தெரிவித்தார். 


இன்னும் அதிகபலத்துடன் ஒன்று கூடி, ஷமியைக் காயப்படுத்தி விடலாம் என்ற உந்துதல் இருந்தால், அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களுக்கு இடையிலான நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை அசைக்க முடியாது. ஆரோக்கியமான வகையில் அணியைக் கட்டமைத்துளோம். நான் அணித்தலைவனாக  இருக்கும் வரையில் .00001 சதவீதம் கூட  வெறுப்புக் கருத்துகளுக்கு இடமில்லை என்பதை உறுதிபட தெரிவிக்கிறேன்” என்றார்.