பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய ரிலே பந்தயத்தில்  4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. மேலும், இந்த கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் 3:14: 12 வினாடிகளில் கடந்து, இந்தியாவின் தேசிய சாதனையையும் முறியடித்துள்ளது. இந்திய அணியின் பழைய சாதனை கடந்த 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 3:14.34 ஆக பதிவானது. 


இதன்மூலம், பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய ரிலேயில் ஓராண்டுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் அஜ்மல், ஜோதிகா, அமோஜ், ஷுபா ஆகியோர் 3:14.12 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய தேசிய சாதனை படைத்தனர்.






இலங்கை அணி மூன்று நிமிடம் 17.00 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வியட்நாம் அணி மூன்று நிமிடம் 18.45 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது.


பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை: 


ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்பில் இந்திய கலப்பு அணி தங்கம் பதக்கம் வென்றிருந்தாலும், பாரீஸில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.


உலக தடகள தரவரிசை பாரீஸ் பட்டியலில் இந்திய அணி 21வது இடத்தில் உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி 15 அல்லது 16வது இடத்தை பிடிப்பதே இலக்காக இருந்தது. ஆனால், 21 வது இடத்தில் இருப்பதால் இந்திய அணி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான பாதை கடினமாகியுள்ளது. பாரீஸில் நடைபெறும் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் 16 அணிகள் மட்டுமே பங்கேற்கும். 


பஹாமாஸின் நாசாவில் நடந்த உலக தடகள தொடர் ஓட்டத்திற்கு இந்திய அணி தகுதி பெற முடியாமல் போனது. வருகின்ற ஜூன் 30ம் தேதி வரையிலான காலக்கெடு வரை நாடுகளின் சிறந்த நேரங்களின் அடிப்படையில் இப்போது இரண்டு இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். செக் குடியரசு (3 நிமிடங்கள் 11.98 வினாடிகள்) மற்றும் இத்தாலி (3 நிமிடங்கள் 13.56 வினாடிகள்) தற்போது ரோட் டு பாரிஸ் பட்டியலில் முறையே 15 மற்றும் 16 வது இடத்தில் உள்ளன. 


குறைந்தது மூன்று நிமிடங்கள் 13.56 வினாடிகளை விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது இந்தியாவின் இலக்காக இருந்தது. அப்போதுதான் இந்திய அணி 16 வது இடத்திற்கு வர முடியும். இந்திய தடகள சம்மேளனம் (AFI) ஜூன் 30 காலக்கெடுவிற்கு முன் கலப்பு 4x400m ரிலே அணியை சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவது குறித்து பரிசீலனை செய்யலாம். ஆசிய தொடர் ஓட்டப் போட்டியின் இரண்டாவது நாளான (இன்று) செவ்வாய்க்கிழமை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா பங்கேற்கிறது.