Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இரண்டாவது நாள் தொடக்கத்திலேயே இந்திய வீரர், வீராங்கனைகள் நான்கு பதக்கங்களை குவித்துள்ளனர்.


ஆசிய பாரா விளையாட்டுகள்:


நான்காவது ஆசிய பாரா விளையாட்டுகள் சினாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ளது.  வரும் 28ம் தேதி வரையில் 22 விளையாட்டுகளில் 24 பிரிவுகளில் 566 தங்கப் பதக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள்  என 309 தடகள வீரர், விராங்கனைகள் சீனா சென்றுள்ளனர். இவர்கள் 17 பிரிவுகளில் களமிறங்க உள்ளனர். முதல் நாள்  முடிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றது.


தங்கம் வென்று அசத்தல்:


இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று மகளிர் படகு போட்டி KL2 பிரிவில், இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பந்தய தூரத்தை 54.962 வினாடிகளில் கடந்து பிராச்சி யாதவ் தங்கம் வென்றார். அவரை தொடர்ந்து, சீனாவின் ஷான்ஷன் வாங்  55.674 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், ஈரானின்  ரோயா சோல்டானி  56.714 விநாடிகளில் கடந்து  வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். முன்னதாக, முதல் நாள் நடைபெற்ற மகளிருக்கான VL2 பிரிவின் இறுதிப் போட்டியிலும், பிராச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ஐரோடாகோன் முதலிடம் பிடித்தார்.


400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்:


400 மீட்டர் டி20 பிரிவில் இந்திய வீராங்கனையான தீப்தி ஜீவான்ஜி, பந்தய தூரத்தை 56.69 விநாடிகளில் எட்டி தங்கப் பதக்கம் வென்றார். 100 மீட்டர் T12 ஓட்டப்பந்தய பிரிவில் இந்திய வீராங்கனையான  சிம்ரன், 12.68 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். 






வெண்கலப் பதக்கம்:


ஆடவர்களுக்கான படகுப்போட்டியில் கேனோ KL3 பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் மணீஷ் கவுரவ் பந்தய தூரத்த 44.605 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.  2.347 வினாடிகள் பின்தங்கி தங்கத்தை தவறவிட்டார். உஸ்பெகிஸ்தானின் காசன் குல்தாஷேவ் 42.258 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் சல்காஸ் டைகெனோவ் 44.605 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதிக்கத்தையும் வென்றனர். இந்த 4 பதக்கங்கள் மூலம், இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.


புதிய சாதனை படைக்குமா இந்தியா?


2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 190 விளையாட்டு வீரர்களை அனுப்பியது. அப்போது 15 தங்கம் உட்பட 72 பதக்கங்களை வென்றதே, இதுநாள் வரை சாதனையாக உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆசிய பாரா விளையாட்டிற்கு 309 வீரர், விராங்கனைகளை அனுப்பியுள்ள இந்தியா புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.