Asian Hockey Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. 


2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. 


போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா  அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன. 






நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது டிரா செய்திருந்தாலோ மூன்று முறை கோப்பையை வென்ற பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 


இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத அணி என்ற பெருமைக்கு ஆளாகியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 


பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதாலும், சீனாவுடனான போட்டியி ஜப்பான் அணி வெற்றி பெற்றதாலும் ஜப்பான் அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.  இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 20 கோல்கள் அடித்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக மற்ற அணிகள் அனைத்தும் சேர்த்து 5 கோல்கள்தான் அடித்துள்ளது. 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள ஜப்பானை வரும் 11ஆம் தேதி எதிர்கொள்கிறது. 


இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் வானவேடிக்கைகள் நடைபெற்றது. ஆனாலும் அதைவிட ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை அதிகப்படுத்த போட்டி முடிந்ததும் இசைப்புயல்  ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து பாடிய வந்தே பாரதம் பாடலை ஒலிபரப்பு செய்தனர். இதனை ரசிகர்களும் சேர்ந்துகொண்டு பாட ராதாகிருஷ்ணன் மைதானமே உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இப்போது இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதும்போது இப்பாடல் ஒலிபரப்பட்டது. அப்போது தோனி பேட்டிங் செய்ததும் குறிப்பிடத்தக்கது.