ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் லீக் சுற்று போட்டியானது இறுதியாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் - இந்தியா இடையிலான போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அரையிறுதியில் இடம்பிடிக்க பாகிஸ்தான் குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டியிருந்தது, ஆனால் இந்தியா ஒருதலைப்பட்சமாக அந்த போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தநிலையில், ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்று முடிவுக்கு பிறகு இந்தியா, ஜப்பான் மலேசியா மற்றும் நடப்பு சாம்பியன் தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவை மலேசியா அணி சந்திக்கிறது. அதேபோல், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பானை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் (நாளை) ஆகஸ்ட் 11ம் தேதி சென்னை மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
லீக் சுற்றுக்குப் பிறகு புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு அணிகளும் நாளை 5வது இடத்திற்கான போட்டியில் விளையாடும்.
போட்டிகள் | தேதி | நேரங்கள் |
பாகிஸ்தான் vs சீனா (5வது இடம்) | ஆகஸ்ட் 11 | 15:30 |
மலேசியா vs கொரியா (அரையிறுதி) | ஆகஸ்ட் 11 | 18:00 |
இந்தியா vs ஜப்பான் (அரையிறுதி) | ஆகஸ்ட் 11 | 20:30 |
3/4 வது இடம் | ஆகஸ்ட் 12 | 18:00 |
இறுதிப்போட்டி | ஆகஸ்ட் 12 | 20:30 |
நேற்றைய போட்டி சுருக்கம்:
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தனர். போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்து அசத்த, இந்திய அணி இரண்டாவது சுற்றில் மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டதுடன் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பும் மங்க தொடங்கியது. போட்டி நேரம் பாதி முடிந்ததும், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறவேண்டும் என்றால் இந்த போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் இளம் பாகிஸ்தான் அணி இந்திய அணியை சமாளிக்க முடியாமல் தவித்தது. இந்திய அணி 3-வது சுற்றில் கிடைத்த பெனால்டி கார்னர் மூலம் இந்திய அணியின் குஜ்ரஸ் சிங் இந்திய அணியின் மூன்றாவது கோலை அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் நான்காவது சுற்றில் இந்திய அணியின் மந்தீப் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக மற்றொரு கோலை அடித்தனர். இதனால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இமாலய வெற்றியை உறுதி செய்தது.