சீனாவில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பாரூல் சௌத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவுக்கு 14வது தங்கம் ஆகும். பாரூல் சௌத்ரி நேற்று நடந்த 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றிருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டு ஆசிய போட்டிகளில் பாரூல் மொத்தம் இரண்டு பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்துள்ளார். 


கடைசி 100 மீட்டரில் ஜப்பானின் ரிரிகா ஹிரோனகாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு 15:14.75 வினாடிகளில் 5 ஆயிரம் மீட்டரைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றார் பாரூல். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார் பாரூல் சௌத்ரி.

போட்டி  முழுவதும் ஜப்பானின் ரிரிகா ஹிரோனகா முன்னிலை வகித்தார், அதே நேரத்தில் பாரூல் போட்டி முழுவதும் நம்பிக்கையுடன் இருந்தார். ஓட்டப்பந்தய வீராங்கனைகள் இருவரும் தங்கத்திற்கான வேட்கையில் மற்ற வீரர்களிடமிருந்து முன்னிலையில் இருந்தனர். கடைசி நேரத்தில், பாரூல் ஹிரோனகாவுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் இருந்தார், ஆனால் அவர் கடைசி 100 மீட்டரில், வேகமாக ஓடி, ஜப்பான் வீரர் ரிரிகா ஹிரோனகாவை பின்னுக்குத் தள்ளி முந்திச் சென்று தங்கத்தை வென்றார்.


இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள ஆசிய போட்டிகளில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 1998ஆம் ஆண்டில் சுனிதா ராணி முதல் வெள்ளியைப் பெற்றார். கடைசியாக 2010 இல் பிரீஜா ஸ்ரீதரன் மற்றும் கவிதா ரவுத் முறையே ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். 


இந்த போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான அங்கிதா தியானி 15:33.03 நேரத்துடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகவும் அமைந்துள்ளது. 


சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய போட்டிகளில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 1500 மீட்டர் டெகாத்லான் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா 49 ஆண்டுகளுக்குப் பிறகு டெகாத்லான் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் டெகாத்லான் போட்டியில் இந்தியா 1974ஆம் ஆண்டு பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 


இந்த போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7 ஆயிரத்து 666 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கதினை இந்தியாவுக்கு சொந்தமாக்கியுள்ளார். 


தேஜஸ்வின் சங்கர் ஒட்டுமொத்த மதிப்பெண்ணுடன் 7666 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றார். கடைசி நிகழ்வான 1500 மீ ஓட்டத்தில், தேஜஸ்வின் ங்கர் 4:48.32 நிமிடங்களில் 629 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.


 போட்டிக்குப் பிறகு அனைத்து விளையாட்டு வீரர்களும் சோர்வுடன் தரையில் விழுந்தபோது, ​​​​தேஜஸ்வின் சங்கர் ஒவ்வொரு போட்டியாளருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தபடி நின்று கொண்டிருந்தார். சட்டை இல்லாத போஸுடன் அனைவரையும் போஸ் கொடுக்க வைத்தபோதும் உற்சாகமாக காணப்பட்டார். 


வெள்ளிப் பதக்கத்துடன், தேஜஸ்வின் சங்கர் 49 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெகாத்லானில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றார். 1974ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சுரேஷ் பாபுதான் கடைசியாக பதக்கம் வென்றவர்.சீனாவின் சன் கிஹாவோவை தேஜஸ்வின் சங்கரை விட 150 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.