கோவை கொடிசியா அரங்கில் மாபெரும் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கடன் உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமல் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக மூவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ”கடந்த மாதம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தென்னை விவசாயம் சார்ந்த மனுக்களை அளித்தோம். அப்போது கொடுத்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காக, இன்றைய தினம் நிர்மலா சீதாராமனை சந்தித்து மீண்டும் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இதில் வேறு எந்த ஒரு அரசியல் காரணமும் கிடையாது. தென்னை நார் தொழிற்சாலைகள் நசிந்து போய் உள்ளது. தேங்காய் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். இது குறித்து மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தான் தற்போதும் இது குறித்து வலியுறுத்தினோம். இது தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. தென்னை விவசாயத்தைப் பற்றி மட்டுமே நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.


கூட்டணி முறிவு நிலைப்பாடு குறித்தான கேள்விக்கு "அது குறித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார். இது எந்த ஒரு அரசியல் ரீதியான சந்திப்பும் இல்லை. விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து மாநில முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறினோம். ஆனால் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து விவசாயத்துறை அமைச்சரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்ததன் அடிப்படையில் தற்பொழுது அதனை மீண்டும் வலியுறுத்தினோம். தற்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் நான் சட்டமன்ற உறுப்பினர் என்றும் மற்ற இரண்டு அமைச்சர்களும் அவர்கள் தொகுதியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தினர்” எனத் தெரிவித்தார்.


நிகழ்ச்சி மேடையில் பேசும் பொழுது பொள்ளாச்சி ஜெயராமன் அம்மா என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், ”எங்களை பொருத்தவரை ஒரே அம்மா எங்கள் புரட்சித்தலைவி(ஜெயலலிதா) அம்மா தான். மத்திய நிதி அமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக குறிப்பிட்ட சொல்லும் பொழுது அம்மா என்று குறிப்பிட்டோம். மற்றபடி யாரோடும் அம்மா (ஜெயலலிதா) உடன் ஒப்பிட முடியாது” எனப் பதிலளித்தார்.