ஆசிய விளையாட்டு போட்டியின் இந்திய அணி 13 தங்கம் உட்பட 60 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி:

ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  அக்டோபர் 8ம் தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது. பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் இடம்பெற்று இருந்த, லேசர் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க செய்தது.

போட்டிகள் என்ன?

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடைபெற உள்ளன. அதில், கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை சார்ந்த போட்டிகள் அடங்கும்.

தொடங்கிய பதக்க வேட்டை:

இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர் விராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். சீனா, ஜப்பான், கொரியா மற்றும் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து, பதக்க வேட்டையை நடத்தி வருகின்றன. இதனால், புள்ளிப்பட்டியலில் மேற்குறிப்பிடப்பட்ட நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

பதக்கப்பட்டியல்:

நாடுகள்   தங்கம்   வெள்ளி   வெண்கலம்   மொத்தம்
சீனா 147 81 42 270
ஜப்பான் 33 44 45 122
தென்கொரியா 31 39 63 133
இந்தியா 13 24 23 60
தைவான் 12 10 17 39
உஸ்பெகிஸ்தான் 11 14 18 43
தாய்லாந்து 10 7 16 33
வடகொரியா 7 10 5 22
ஹாங்காங் 6 15 23 44
பஹ்ரைன் 6 1 4 11

இந்தியா ஆதிக்கம்:

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 9வது நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 24 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது. தடகள வீரர்களின் அசாத்திய திறமையால் ஒன்பதாவது நாளில் 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. தடகள வீரர்கள் இன்றைய போட்டியிலும், தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கான பதக்கங்களை வென்றனர்.

வரலாற்று சாதனை:

சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி ஆகியோர் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்றாலும்,  மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் வெண்கலம் வென்றனர். இந்த பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் அணிகள் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு வெண்கலத்தையும் சேர்த்தன. பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தடை ஓட்டத்தில்,  ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கத்தையும், பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இதனிடையே, இந்திய ஹாக்கி அணி வங்கதேசத்தை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்ததாக இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளது.