பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். கோவிலின் பின்புறம் திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் பல்வேறு ஆசிரமங்களில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர். அதோடு, பௌர்ணமி கிரிவல நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சாமியார்கள் இங்கு வருகின்றனர்.


அதில், பெரும்பாலானோர் தொடர்ந்து இங்கேயே தங்கிவிடுகின்றனர். பல்வேறு ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள், தன்னார்வலர்கள் மூலம் சாமியார்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே, சாமியார்களுக்கு உகந்த இடமாக திருவண்ணாமலை மாறியிருக்கிறது.


சாமியார்கள் போர்வையில் ஆசாமிகளா?


இந்நிலையில், ஆன்மிக நோக்கத்துடன் இங்கு தங்கியுள்ள சாமியார்களுக்கு மத்தியில், குற்றப்பின்னணி உள்ள சிலரும் ஊடுருவி உள்ளனர். சாமியார்கள் தோற்றத்தில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானது என கருதுகின்றனர். அதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, கிரிவல பக்தர்களிடம் ரகளையில் ஈடுபடும் சாமியார்கள் சிலர் உள்ளனர்.


 




 


எனவே, சாமியார்களின் விபரங்களையும், கைரேகை, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை முறையாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிக்கின்றனர். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பௌவுர்ணமிக்காக முகாமிட்ட சாமியார்களின் விபரங்களை கடந்த இரண்டு நாட்களாக சரி பார்த்து விசாரிக்கும் பணியில் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் ஆய்வாளர் ஆனந்தன், துணை ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.


சாமியார்களின் அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, எதற்காக இங்கு தங்கியுள்ளனர், எத்தனை காலமாக உள்ளனர் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டன. அதோடு, சாமியார்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பின்னணி உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.


 



 


திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் உயர் அதிகாரி கூறியதாவது;


பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். அவர்களோடு, புதிது புதிதாக சாமியார்களும் வந்து, நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். அவர்களில் கிரிமினல் சாமியார்கள், போலி சாமியார்களும் உள்ளனர். இதனால், பொது மக்கள் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படுகிறது. போலி சாமியார்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.


திருவண்ணாமலையில் ஆசிரமங்கள், அன்னதான கூடங்கள், அங்கு தங்கியிருப்போர், வேலைக்கு வந்திருப்போர் என, அனைவரையும் போல, சாமியார்களும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவ்வப்போது சரி பார்க்கப்படுகின்றன. பதிவு செய்து தங்கி இருக்கும் சாமியார்களுக்கு, அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிதாக யார் வந்துள்ளனர் என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குற்றப்பின்னணி உடையோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் வாயிலாக, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.