Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டில் இந்திய வீரர், விராங்கனைகள் அடுத்தடுத்து தங்கப் பதக்கங்களை வென்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி:
ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டு கொண்டாடப்படுகிறது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் 8ம் தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் முதலே இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போது 80-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியா புதிய சாதனை:
ஆசிய விளையாட்டில் ஒரு எடிஷனில் 16 தங்கப் பதக்கங்களை வென்றதே இந்தியாவின் சிறப்பான செயல்பாடாக இருந்தது. ஆனால், இந்த முறை தற்போது வரையுமே 21 தங்கப் பதக்கங்களை வென்று, இந்திய வீரர், வீராங்கனைகள் புதிய வரலாறு படைத்துள்ளனர். இன்னும் 3 நாட்கள் பல்வேறு பிரிவுகளிலும் போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி மேலும் சில தங்கப் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே, வில்வித்தையில் ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஓஜாஸ் மற்றும் பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய குழு தங்கப்பதக்கம் வென்றது. ஏற்கனவே வில்வித்தையில் இந்தியா கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் ஆடவர் தனிநபர் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கான பதக்கங்களை வென்றவர்களில் 10-க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர்.
பதக்கப்பட்டியல்:
நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
சீனா | 179 | 99 | 55 | 333 |
ஜப்பான் | 44 | 54 | 60 | 158 |
தென்கொரியா | 33 | 47 | 77 | 157 |
இந்தியா | 21 | 32 | 33 | 86 |
உஸ்பெகிஸ்தான் | 19 | 16 | 25 | 60 |
தைவான் | 15 | 15 | 23 | 53 |
வடகொரியா | 10 | 16 | 9 | 35 |
தாய்லாந்து | 10 | 14 | 27 | 51 |
பஹ்ரைன் | 10 | 2 | 5 | 17 |
ஈரான் | 8 | 17 | 17 | 42 |
எதிர்பார்க்கப்படும் பதக்கங்கள்:
இந்திய விரர், வீராங்கனைகள் தற்போது ஆடவர் கிரிக்கெட், ஆடவர் ஹாக்கி, வில்வித்தை, பேட்மிண்டன், கபாடி மற்றும் ஹாக்கி போன்ற பல்வேறு பிரிவுகளில், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதனால், எதிர்வரும் நாட்களில் இந்தியாவிற்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வதில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆடவர் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி அணி தங்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
போட்டிகள் என்ன?
ஆசிய விளையாட்டில் மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை சார்ந்த போட்டிகள் அடங்கும்.