2023ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்றைய எட்டாவது நாளில் மட்டும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்தது. இதன்மூலம், புதிய வரலாற்றை இந்தியா பதித்தது.
அக்டோபர் 1ஆம் தேதியான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா மொத்தம் 15 பதக்கங்களை வென்றது. இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் அதிகப் பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியது. இதற்கு முன் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 11 பதக்கங்களை வென்றிருந்ததே அதிகபட்சமாக இதுவரை இருந்தது. அதுவும் நேற்று முறியடிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை விளையாடிய 8 நாட்களில் இந்தியா 53 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். சமீபத்திய பதக்கப் பட்டியலில் அடிப்படையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. சீனா 243 பதக்கங்களுடன் அதாவது 132 தங்கம், 72 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
8ம் நாள் முடிவில் பதக்க அட்டவணை:
- சீனா- (132 தங்கம்), (72 வெள்ளி), (39 வெண்கலம்) மொத்தம் 243 பதக்கங்கள்
- கொரியா - (30 தங்கம்), (35 வெள்ளி) (60 வெண்கலம்) - மொத்தம் 125 பதக்கங்கள்
- ஜப்பான் - (29 தங்கம்), (41 வெள்ளி), (42 வெண்கலம்) - மொத்தம் 112 பதக்கங்கள்
- இந்தியா - (13 தங்கம்), (21 வெள்ளி), (19 வெண்கலம்) - மொத்தம் 53 பதக்கங்கள்
- உஸ்பெகிஸ்தான் - (11 தங்கம்), (12 வெள்ளி), (17 வெண்கலம்) - மொத்தம் 40 பதக்கங்கள்
- தாய்லாந்து – (10 தங்கம்), (6 வெள்ளி), (14 வெண்கலம்) – மொத்தம் 30 பதக்கங்கள்
- சீன தைபே - (9 தங்கம்), (10 வெள்ளி), (14 வெண்கலம்) - மொத்தம் 33 பதக்கங்கள்
- ஹாங்காங் - (6 தங்கம்), (15 வெள்ளி), (19 வெண்கலம்) - மொத்தம் 40 பதக்கங்கள்
- வட கொரியா - (5 தங்கம்), (9 வெள்ளி), (5 வெண்கலம்) - மொத்தம் 19 பதக்கங்கள்
- இந்தோனேசியா - (4 தங்கம்), (3 வெள்ளி), (11 வெண்கலம்) - மொத்தம் 18 பதக்கங்கள்
எந்த போட்டிகளில் இதுவரை பதக்கங்களை குவித்துள்ளது இந்திய அணி:
துப்பாக்கி சுடுதல் | 7 | 9 | 6 | 22 |
படகோட்டுதல் | 0 | 2 | 3 | 5 |
கிரிக்கெட் | 1 | 0 | 0 | 1 |
படகோட்டம் | 0 | 1 | 2 | 3 |
குதிரையேற்றம் | 1 | 0 | 1 | 2 |
வுஷூ | 0 | 1 | 0 | 1 |
டென்னிஸ் | 1 | 1 | 0 | 2 |
ஸ்குவாஷ் | 1 | 0 | 1 | 2 |
தடகளம் | 2 | 5 | 5 | 12 |
கோல்ஃப் | 0 | 1 | 0 | 1 |
குத்துச்சண்டை | 0 | 0 | 1 | 1 |
பேட்மிண்டன் | 0 | 1 | 0 | 1 |
மொத்தம் | 13 | 21 | 19 | 53 |
நேற்றைய நாளில் எந்த போட்டிகளில் பதக்கம்:
பேட்மிண்டனில் வெள்ளி:
இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி சீனாவுக்கு எதிரான தங்கப் பதக்கப் போட்டியில் தோல்வியைச் சந்தித்து வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பியது. இதில் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்திய இந்தியா, முதல் 2 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இதன் பின்னர் மீண்டும் களமிறங்கிய சீனா, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவை வீழ்த்தியது.
ஜோதி யாராஜி வெண்கலப் பதக்கம்:
100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியின் முடிவில் ஜோதி மூன்றாவது இடத்தில் இருந்தார். அப்போது ஜோதிக்கு வெண்கல பதக்கமே கிடைத்தது. இரண்டாவதாக வந்த சீன வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஜோதியின் பதக்கம் வெண்கலத்தில் இருந்து வெள்ளியாக மாறியது.
நந்தினி வெண்கலப் பதக்கம்:
800 மீட்டர் ஹெப்டத்லான் போட்டியில் நந்தினி அகசரா வெண்கலப் பதக்கம் வென்றார்.
நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் வெள்ளி:
நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் மற்றும் ஜின்சன் வெள்ளி மற்றும் வெண்கலம்:
ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் இரண்டு பதக்கங்களை வென்றனர். அஜய் குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜின்சன் ஜான்சன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம்:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தூர் குண்டு எறிதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். முன்னதாக, 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தஜிந்தர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் தங்கம்:
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தடகளப் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை அவினாஷ் சேபிள் பெற்றுத் தந்தார்.
உலக சாம்பியனான நிகத் ஜரீன் அரையிறுதியில் தோல்வி:
குத்துச்சண்டையில், பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியனான நிகாத் ஜரீன் தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக தோல்வியை சந்திக்க நேரிட்டது.