Asian Games 2023 India Medals: சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மிகவும் கோலாகலமாக தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக பதக்கப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் சாதனை படைத்துள்ளது.
அதாவது இந்தியா இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில், அதிக பதக்கங்களை வென்றுள்ளது என்றால் அது கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்டாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்தான். அந்த போட்டியில் இந்தியா மொத்தம் 70 பதக்கங்களை வென்றது. அதில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா இதுவரை அதாவது அக்டோபர் 4ஆம் தேதியில் அட்டவணையிடப்பட்ட அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்த நிலையில், இந்தியா பதக்கப்பட்டியலில் 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் இந்தியா 81 பதக்கங்கள் வென்றிருப்பது இதுவே முதல் முறை என்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிக கோல்கள் வென்ற சீசனாக இந்த 2023ஆம் ஆண்டு சீசன் அமைந்துள்ளது.
இந்தியாவின் சிறந்த நிலைக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது துப்பாக்கிச் சுடுதல் மற்றும் தடகளப் போட்டிகள்தான். இந்த இரண்டு வகைப் போட்டிகளும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளன. துப்பாக்கிச் சுடலில் இந்தியா 22 பதக்கங்களையும், தடகளத்தில் 23 பதக்கங்களையும் பெற்றுள்ளது.
100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற இந்தியா தற்போது சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குப் அடுத்தபடியாக பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சீனா பதக்கப்பட்டியலில் 300 பதக்கங்களை வென்ற அணியாக உருவெடுத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் மிக உயர்ந்த தரவரிசை இடம் என்றால், ஆசிய விளையாட்டுப்போட்டிகள் தொடங்கப்பட்ட 1951ஆம் ஆண்டு புதுதில்லியில் நடத்தப்பட்ட சீசனில் 15 தங்கம், 16 வெள்ளி மற்றும் 20 வெண்கலத்துடன் 2வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தம், ஹாக்கி (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஆண்கள் கிரிக்கெட், பாட்மிண்டன் (ஒற்றையர் மற்றும் இரட்டையர்), வில்வித்தை (ரிகர்வ் அணி மற்றும் தனிநபர்) ஸ்குவாஷ் (இரட்டையர்), குத்துச்சண்டை, கபடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளம் என இன்னும் போட்டிகள் இருப்பதால் இந்தியா தனது பதக்க வேட்டையை 100 மற்றும் அதனைக் கடந்து செல்ல வேண்டும் என ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முன்பை விட சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தியாவின் சிறந்த பதக்க எண்ணிக்கையை நாங்கள் கொண்டாடுகிறோம், இது எங்கள் விளையாட்டு வீரர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு, துணிவு மற்றும் விளையாட்டு மனப்பான்மைக்கு சான்றாகும். ஒவ்வொரு பதக்கமும் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தினை எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமையான தருணம். எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.