19வது ஆசிய விளையாட்டுகளில், மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னுராணி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் 62.92 மீட்டர் ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார். இது இந்தியாவின் 15வது தங்கம் ஆகும்.
பதக்கப் பட்டியல்
தரவரிசை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | சீன மக்கள் குடியரசு | 157 | 86 | 44 | 287 |
2 | ஜப்பான் | 33 | 46 | 49 | 128 |
3 | கொரிய குடியரசு | 32 | 42 | 63 | 137 |
4 | இந்தியா | 15 | 26 | 28 | 69 |
5 | உஸ்பெகிஸ்தான் | 13 | 14 | 21 | 48 |
6 | சீன தைபே | 12 | 10 | 18 | 40 |
7 | தாய்லாந்து | 10 | 9 | 18 | 37 |
8 | DPR கொரியா | 7 | 10 | 5 | 22 |
9 | பஹ்ரைன் | 7 | 1 | 4 | 12 |
10 | ஹாங்காங் (சீனா) | 6 | 15 | 24 | 45 |
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை, இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
அன்னு ராணியின் முதல் தங்கம் இந்தியாவுக்கு கிடைத்த 15வது தங்கமாகும். இந்தியா தற்போது 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அன்னு ராணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, ஈட்டி எறிதலில், காமன்வ்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருந்தார். இதற்கு முன்பு 61.86 மீட்டர் தூரம் எறிந்து 60 மீட்டர் தூரத்தைக் கடந்த முதல் இந்தியப் பெண் என்ற வரலாறு படைத்தார். கூடுதலாக, 2022 இல் நடைபெற்ற இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டியில் 63.82 மீட்டர் தூரம் எறிந்து, இதுவரை இந்திய அளவிலான சாதனையாளர் என்ற புகழையும் அவர் பெற்றுள்ளார்.
மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பாரூல் சௌத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவுக்கு 14வது தங்கம் ஆகும். பாரூல் சௌத்ரி நேற்று நடந்த 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றிருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டு ஆசிய போட்டிகளில் பாரூல் மொத்தம் இரண்டு பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்துள்ளார்.
கடைசி 100 மீட்டரில் ஜப்பானின் ரிரிகா ஹிரோனகாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு 15:14.75 வினாடிகளில் 5 ஆயிரம் மீட்டரைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றார் பாரூல். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார் பாரூல் சௌத்ரி.
போட்டி முழுவதும் ஜப்பானின் ரிரிகா ஹிரோனகா முன்னிலை வகித்தார், அதே நேரத்தில் பாரூல் போட்டி முழுவதும் நம்பிக்கையுடன் இருந்தார். ஓட்டப்பந்தய வீராங்கனைகள் இருவரும் தங்கத்திற்கான வேட்கையில் மற்ற வீரர்களிடமிருந்து முன்னிலையில் இருந்தனர். கடைசி நேரத்தில், பாரூல் ஹிரோனகாவுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் இருந்தார், ஆனால் அவர் கடைசி 100 மீட்டரில், வேகமாக ஓடி, ஜப்பான் வீரர் ரிரிகா ஹிரோனகாவை பின்னுக்குத் தள்ளி முந்திச் சென்று தங்கத்தை வென்றார்.
இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள ஆசிய போட்டிகளில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 1998ஆம் ஆண்டில் சுனிதா ராணி முதல் வெள்ளியைப் பெற்றார். கடைசியாக 2010 இல் பிரீஜா ஸ்ரீதரன் மற்றும் கவிதா ரவுத் முறையே ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
இந்த போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான அங்கிதா தியானி 15:33.03 நேரத்துடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகவும் அமைந்துள்ளது.