சீனாவில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய போட்டியில் இந்தியா பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, 4x400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் அனஸ் முஹம்மது யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வாரியத்தோடி மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் 3:01.58 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்றனர். 

இந்தியா இன்றைக்கு மட்டும் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 

தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீன மக்கள் குடியரசு 166 91 47 304
2 ஜப்பான் 35 50 52 135
3 கொரிய குடியரசு 33 44 67 144
4 இந்தியா 18 30 32 80
5 உஸ்பெகிஸ்தான் 14 15 22 51
6 சீன தைபே 12 12 19 43
7 தாய்லாந்து 10 12 22 44
8 DPR கொரியா 8 10 7 25
9 ஹாங்காங் (சீனா) 7 15 26 48
10 பஹ்ரைன் 7 1 4

மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலான் பெய்ன்ஸ் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 800 மீட்டரை 2:03.27 நிமிடங்களில் எட்டி அசத்தினார். 

பஞ்சாபைச் சேர்ந்த 25 வயதான அவர் மிகவும் போட்டி நிறைந்த பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை 2:03.75 வினாடிகளில் வென்றார்.

2:03.20 நிமிடங்களில்  இலக்கை தொட்ட இலங்கையின் தருஷி திசாநாயக்க தங்கம் பெற்றார். வெண்கலப் பதக்கத்தை  800 மீட்டர் இலக்கை 2.03:90 நிமிடங்களில் கடந்து சீனாவின் சுன்யு வாங் வென்றார்.

பெயின்ஸ் இதற்கு முன்பு ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி வென்றிருந்தார். 800 மீ ஓட்டத்தில் மற்றொரு இந்திய வீராங்கனையான சந்தா 2:05.69 என்ற இலக்குடன் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் ஹர்மிலன் பெய்ன்ஸ், ஆண்கள் 5000 மீட்டர் ஓட்டத்தில் அவினாஷ் சேபல் மற்றும் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கிஷோர் குமார் ஜெனா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று வெள்ளி வேட்டையில் ஈடுபட்டனர். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். 

இன்றைய நாளை துவங்கும் போது இந்தியா 15 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. அதாவது மொத்தம் 73 பதக்கங்களை வென்றிருந்தது. 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் மிக உயர்ந்த தரவரிசை இடம் என்றால்,  ஆசிய விளையாட்டுப்போட்டிகள் தொடங்கப்பட்ட 1951ஆம் ஆண்டு புதுதில்லியில்  நடத்தப்பட்ட சீசனில் 15 தங்கம், 16 வெள்ளி மற்றும் 20 வெண்கலத்துடன் 2வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்தம், ஹாக்கி (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஆண்கள் கிரிக்கெட், பாட்மிண்டன் (ஒற்றையர் மற்றும் இரட்டையர்), வில்வித்தை (ரிகர்வ் அணி மற்றும் தனிநபர்) ஸ்குவாஷ் (இரட்டையர்), குத்துச்சண்டை, கபடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளம் என இன்னும் போட்டிகள் இருப்பதால் இந்தியா தனது பதக்க வேட்டையை 100 மற்றும் அதனைக் கடந்து செல்ல வேண்டும் என ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முன்பை விட சிறப்பாக விளையாடி வருகிறது.  இந்தியாவின் சிறந்த பதக்க எண்ணிக்கையை நாங்கள் கொண்டாடுகிறோம், இது எங்கள் விளையாட்டு வீரர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு, துணிவு மற்றும் விளையாட்டு மனப்பான்மைக்கு சான்றாகும். ஒவ்வொரு பதக்கமும் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தினை எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமையான தருணம். எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.