வில்வித்தை - காம்பவுண்ட் மகளிர் தனிநபர் இறுதிப் போட்டியில்  தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம். இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் சேவோன் சோவை வீழ்த்தி அசத்தினார். மற்றொரு இந்திய வீராங்கானை அதிதி வெண்கலம் வென்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.


போட்டி விவரம்:


ஜோதி சுரேகா வென்னம் தென் கொரியாவின் சேவோன் சோவுக்கு எதிரான காம்பவுண்ட் மகளிர் பிரிவில் தனிநபர் இறுதிப் போட்டியில் களமிறங்கினார். முதல் சுற்றின் முதல் முயற்சியில் ஜோதி 8 புள்ளிகளுடன் ஒரு அதிர்ச்சியான தொடக்கத்தைப் பெற்றார். அதே நேரத்தில் சேவோன் 10 புள்ளிகளை சேர்த்தார். அடுத்தடுத்த முயற்ச்களில் முதல் சுற்றின் முடிவில் இந்தியா 29 புள்ளிகளையும், கொரியா 30 புள்ளிகளையும் பெற்றது. இரண்டாவது சுற்றில் 3 முயற்சிகளிலும் ஜோதி அசத்தினார். இதனால் இந்த சுற்றின் முடிவில் இந்தியா 59 புள்ளிகளையும் கொரியா 58 புள்ளிகளையும் பெற்றுள்ளது. நெருக்கடியான சூழலில் வெறும் ஒரு புள்ளியுடன் முன்னிலை பெற்ற ஜோதி, மூன்றாவது சுற்றின் முடிவில் 2 புள்ளிகளை முன்னிலை பெற்றார். அதன்படி இந்தியா 89 புள்ளிகளையும் கொரியா 87 புள்ளிகளையும் பெற்றது.


விறுவிறுப்பான இறுதிக்கட்டம்:


நான்காவது சுற்றில் கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் துல்லியமாக இலக்கை தாக்கி மொத்தமாக 30 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் அவரது புள்ளிகள் 119 ஆக உயர எதிரணி வீராங்கனை தடுமாற தொடங்கினார். இதனால் அவரால் 116 புள்ளிகளை மட்டுமே எட்ட முடிந்தது. இறுதி மற்றும் 5வது சுற்றிலும் அடுத்தடுத்த 3 வாய்ப்புகளிலும் ஜோதி மிக துல்லியமாக இலக்கை அடித்து 30 புள்ளிகளை பெற அவரது மொத்த புள்ளிகள் 149-அ எட்டியது. ஆனால் எதிரணி வீராங்கானையால் கூடுதலாக 29 புள்ளிகளை சேர்க்க முடிந்தது. இதன் மூலம், சேவோன் சோவை 149-க்கு 145 அதாவது 4 புள்ளிகள் வித்தியாசத்தில் விழ்த்தி ஜோதி சுரேகா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதனிடையே, சக இந்திய வீராங்கனையான அதிதி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வென்று அசத்தினார்.