ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார்.


9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதனிடையே, மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா தங்கம் வென்று அசத்தினார். 






 


முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற செஸ் போட்டியில் கெளஸ்தவ் சாட்டர்ஜியை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இவர் 6.5 புள்ளிகளை எடுத்திருந்தார். கெளஸ்தவ் சாட்டர்ஜி 5.5 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் இருந்தனர். அதிபன் 6 புள்ளிகள், கார்த்திக் வெங்கட்ராமன் 6 புள்ளிகள், எம். பிரணேஷ் 5.5 புள்ளிகள், வி.பிரணவ் 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர்.


மகளிர் பிரிவில் பி.வி.நந்திதா 7 புள்ளிகளுடன் இருந்தார். செளம்யா ஸ்வாமிநாதன் 5 புள்ளிKள், என்.பிரியங்கா 5.5 புள்ளிகள், திவ்யா தேஷ்முக் 6 புள்ளிகள், பத்மினி ரவுத் 6 புள்ளிகள், வந்திகா அகர்வால் 5 புள்ளிகளுடன் இருந்தனர்.


முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 8ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 


அத்துடன் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று இருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கமும் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்று இருந்தனர்.


செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு பிறகு பிரக்ஞானந்தா அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கப் செஸ் தொடரில் பங்கேற்றார். இந்தத் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், அணிஷ் கிரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றனர். இந்தத் தொடரின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள அலிரெசா ஃபிரொஸ்ஜாவை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள அனிஷ் கிரியை வீழ்த்தினார். மூன்றாவது சுற்றில் நெய்மனை வீழ்த்தினார்.


அதேபோல்,  நான்காவது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான லெவான் அரோனியனை எதிர்த்து விளையாடினார். உலக செஸ் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள அரோனியனை 3-1 என்ற கணக்கில் லெவான் அரோனியனை பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார். 


யார் இந்த நந்திதா?


சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் நந்திதா. இவருக்கு சிறு வயது முதலே செஸ் மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. ஒருபுறம் செஸ் விளையாடிக் கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். 
இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்  கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 


2015-இல் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார். 2016 ஆம் ஆண்டு உலக ஜூனியர்  செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கத்தையும், 2019 ஆம் ஆண்டு  இந்தியாவின் 17-வது மகளிர் கிராண்ட் மாஸ்டராக ஆனார். 


2020-ஆம் ஆண்டு ஆசிய அளவில் ஆன்லைனில் நடைபெற்ற  தேசியப் போட்டியில் தங்கம் வென்றார்.  2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வந்தார்.   மாமல்லபுரத்தில் நடைபெற்ற, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது வெற்றிகள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றார்.