ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக மலேசிய அணி இந்த தொடரிலிருந்து விலகியது.  நேற்று நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிந்தது.


இந்நிலையில் இன்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இந்திய அணிக்கு தொடர்ந்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எனினும் தொடக்கத்தில் கிடைத்த பெனால்டி கார்னவர் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் கோலாக மாற்ற தவறினர். அதன்பின்னர் ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் தில்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 




இரண்டாவது கால்பகுதியில் 22ஆவது நிமிடத்தில் தில்பிரீத் சிங் இரண்டாவது கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணி கோல் மழை பொழிய தொடங்கியது. முதல் பாதியின் இறுதியில் இந்திய அணி 3-0 என்று முன்னிலை பெற்று இருந்தது. மூன்றாவது கால்பகுதியில் இந்திய அணி வீரர்கள் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றியது. ஜர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், தில்பிரீத் சிங் தன்னுடைய ஹாட்ரிக் கோலையும் அடித்தனர். 


இதன்காரணமாக கடைசி கால்பகுதியில் இந்திய அணி 6-0 என்ற ஸ்கோருடன் விளையாடியது. கடைசி கால்பகுதியிலும் இந்திய வீரர்கள் மேலும் 3 கோல்களை அடித்தனர். ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த இருநாடுகள் விளையாடும் போட்டி என்பதால் அது தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. 






ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 3 முறையும்(2011,2016,2018), பாகிஸ்தான் அணி (2012,2013,2018) 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக இந்திய-பாகிஸ்தான் அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 2016,2018 தொடர்ந்து 2021ஆம் ஆண்டிலும் தொடரை வென்று இந்தியா ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க: முரண்படும் கங்குலி, கோலியின் கருத்துகள்.. என்னதான் நடக்குது இந்திய கிரிக்கெட் அணியில்?