சீனாவை தோற்கடித்து, ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியை வென்றது இந்திய அணி. இறுதிப்போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று, ஐந்தாவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்று இந்திய அணி சாதனைப்புரிந்துள்ளது.


சீனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா தான் பங்கேற்ற அனைத்துப்போட்டிகளிலும் அபார வெற்றிப் பெற்றும், தற்போது இறுதிப்போட்டியில் வென்று சாதனைப்படைத்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்கோப்பையை 4 முறையாக வென்ற இந்திய அணி, தற்போது சீனாவில் நடைபெற்ற போட்டியிலும் வென்று 5-வது முறையாக வென்று சாதனைப் புரிந்துள்ளது.


இன்று சீனாவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சீனாவுக்கு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப சீனாவின் வீரர்களும் சிறப்பாக விளையாடினார். அரை இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய சீன வீரர்கள், இந்தியாவுக்குப் பெரும் சவாலாக இருந்தனர். இந்திய அணியினரின் கோலாக்கும் பல முயற்சிகளை சீனா தடுத்து நிறுத்தியது. எனவே, மூன்றாவது பகுதி வரை இரு அணிகளும் கோலடிக்க முடியவில்லை. ஆனால், நான்காவது பகுதி ஆட்டத்தில், இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் அபாரமாக கோலடித்து, இந்திய அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார். இந்த முன்னிலையை தகர்க்க சீனா, எவ்வளவோ முயன்றும் இந்திய அணியினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆட்ட நேர முடிவில், இந்திய அணியினர், 1-0 என்ற கோல் கணக்கில் கோப்பையை வென்றனர்.


இந்த வெற்றியின் மூலம், 2011, 2016, 2018, 2023 மற்றும் 2024-ம் ஆண்டு என ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கியை வென்றுள்ளது இந்திய அணி. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்று வந்த இந்திய அணி, தற்போது ஆசிய ஹாக்கியின் முடிசூடா மன்னன் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது. இதனால், ஆசிய ஹாக்கி சாம்பியனஸ் கோப்பையின் இரண்டாவது இடத்தை சீனாவும் மூன்றாவது இடத்தை பாகிஸ்தானும் பிடித்துள்ளது.