ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. வரும் 12ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, மலேசியா, சௌத் கொரியா என அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். அனைத்து அணிகளுக்கும் தலா 4 போட்டிகள் முடிந்துவிட்டது. இதில் இந்திய அணி மூன்று வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதுடன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டும் உள்ளது. அந்த போட்டியின் முடிவு இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை எந்தவகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் இந்திய அணி அடுத்த போட்டியை கேஷவுலாககூட ஆடலாம். ஆனால் இந்திய அணி நாளை தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. காராணம் பாகிஸ்தான் அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இம்முறை பாகிஸ்தான் அணி கொஞ்சம் தடுமாறி வருவதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டும். மிகவும் இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் களமிறங்குவதால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற ஆவல் இப்போதே ரசிகர்கள் மத்தியில் குடிகொண்டுவிட்டது.
இந்நிலையில், சீனாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் முகமது சக்லைன், சீனாவுடனான போட்டிக்குப் பின்னர், ”இந்தியாவுடனான போட்டி மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இளம் வீரர்களைக் கொண்ட எங்கள் அணிக்கு இந்தியாவை எப்படி கையாளவேண்டும் என்பது குறித்து கற்றுத்தரப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எங்களுக்கு ஒருநாள் உள்ளது. இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் உள்ளிட்ட சில முக்கிய வீரர்களை எப்படி திசைதிருப்புவது உள்ளிட்ட விஷயங்கள் எங்கள் அணிக்கு கற்றுத்தரப்படும் என கூறினார்.
மேலும், மலேசியாவுக்கு எதிராக இந்திய அணியின் ஆட்டம் மிகவும் நன்றாக இருந்தது. இதனால் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் தனி திட்டம் வகுக்க வேண்டும் எனவும் சாக்லைன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி தற்போது 4 போட்டிகளில் விளையாடி, 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.